சுதந்திரத்துக்காக தங்களது இன்னுயிரை ஈந்த தியாகிகளின் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சனிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2020      தமிழகம்

சென்னை : தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக அல்லும் பகலும் தொடர்ந்து 

உழைத்துக்கொண்டே இருப்பேன் என்று சுதந்திர தினவிழாவில் முதல்வர் எடப்பாடி தெரிவித்தார். மேலும் சுதந்திரத்துக்காக தங்களது இன்னுயிரை ஈந்த தியாகிகளின் ஓய்வூதியம்  உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். அதன்படி தியாகிகளின் ஓய்வூதியம் 16 ஆயிரம் ரூபாயிலிருந்து 17 ஆயிரமாக உயரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

கொடி ஏற்றிய முதல்வர்:-

சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக் கொடி ஏற்றினார். இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர் பெருமக்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய முதல்வர் அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது,

தமிழர்களின் நாகரீக தொன்மையை உலகுக்கு பறைசாற்றும் கீழடியில் 12 கோடியே 21 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் உலகத் தரம் வாய்ந்த அகழ்வைப்பகம் அமைக்கும் பணிக்கு நான்  சமீபத்தில் அடிக்கல் நாட்டியுள்ளேன்.  அப்பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

5 புதிய மாவட்டங்கள் உதயம் :-

தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 புதிய மாவட்டங்களை ஒரே ஆண்டில் தொடங்கிய பெருமை அம்மாவின் அரசையே சாரும். நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து புதிய மயிலாடுதுறை மாவட்டம் துவங்க பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன என்பதையும் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

100 யூனிட் இலவச மின்சாரம் :-

அம்மா அவர்கள் 2011-ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்கும்போது இருண்டு கிடந்த தமிழ்நாட்டை, தனது அயராத முயற்சியினால் பல்வேறு திட்டங்களை தீட்டி, அவற்றை நிறைவேற்றியதன் காரணமாக, இன்று  தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. 

அம்மா அவர்கள், 2016-ல் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தவுடன், ஒவ்வொரு வீட்டு மின் நுகர்வோருக்கும் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்க ஆணையிட்டார்கள். இதன்மூலம் சுமார் 2.1 கோடி குடும்பங்களுக்கு மேல் பயன்பெற்று வருகின்றனர். 

குறிப்பாக, 100 யூனிட்டிற்குள் மின் நுகர்வு செய்யும் சுமார் 70 லட்சம் ஏழை, எளிய குடும்பங்களுக்கு இன்று வரை தொடர்ந்து விலையில்லா மின்சாரமே வழங்கப்பட்டு வருகிறது. இச்சலுகையை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு கடந்த 4 வருடங்களாக 11,512 கோடி ரூபாய் மானியமாக வழங்கி உள்ளது.  

குடிசையில்லா தமிழ்நாட்டினை உருவாக்க, கடந்த 9 ஆண்டுகளில், சுமார் 2 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் 7,540 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நகர்ப்புற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட  சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 11 நகரங்களில்,  10,451 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் பலகட்ட முன்னேற்ற நிலையில் உள்ளன.  

ஒரு நாட்டில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டுமானால், அதற்கு முக்கியமாக விளங்குவது காவல் துறையின் பணியாகும்.   குற்றங்கள், களவுகள் மற்றும் விபத்துகள் குறைந்து, சமூக விரோதிகளை சட்டத்தின் பிடியில் நிறுத்தி, பாதுகாப்பான அமைதியான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு :-

கடந்த ஆண்டுகளில் இரண்டு முறை நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாகவும், நான் கடந்த ஆண்டு இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு நேரடியாகச் சென்று தொழில் முதலீட்டாளர்களை சந்தித்ததன் வாயிலாகவும், தொடர்ந்து தமிழ்நாடு புதிய முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.   

இம்முயற்சிகளால், கடந்த ஓராண்டில் மட்டும் தமிழ்நாட்டிற்கு 54 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பிலான 107 திட்டங்கள் வந்துள்ளன.  இதன் மூலம்  1 லட்சத்து 54 ஆயிரத்து 849 நபர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை கொரோனா பாதிப்பிலிருந்து மீட்டெடுத்து, மறுகட்டமைப்பு செய்ய புகழ்பெற்ற வல்லுநரும், நமது முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னருமான முனைவர்.  ரங்கராஜன் அவர்கள் தலைமையில் ஒரு வல்லுநர் குழுவையும் அம்மாவின் அரசு  அமைத்துள்ளது.

அம்மா அவர்களின் அரசு முனைந்து எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக, மும்பையைச் சேர்ந்த, ப்ராஜெக்ட்ஸ் டுடே  என்ற நிறுவனம், கோவிட் காலத்திலும், அதாவது கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் புதிய முதலீடுகளை ஈர்த்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளதால், தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதலிடத்தினைப் பிடித்துள்ளது என்று தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.  

கொரோனா காலத்தில் மட்டும், இதுவரை மொத்தம் 41 புதிய தொழில் திட்டங்களை தமிழ்நாட்டில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தொழில் நிறுவனங்களுடன் கையெழுத்தாகியுள்ளது.

இதன் மூலம் 30ஆயிரத்து 664 கோடி ரூபாய் முதலீடும், 67 ஆயிரத்து 212   நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  தமிழ்நாட்டில் பெருமளவிலுள்ள தொழில்களுக்கு, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஊரடங்கினால் ஏற்பட்ட பாதிப்புகளை களைய, இதுவரை 7,043 கோடி ரூபாய் கடன் ஒப்புதல் வழங்கப்பட்டு, தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது.

எனவே, தமிழ்நாடு பொருளாதாரத்தில் தனது இயல்பு நிலையை வெகு விரைவில் அடைந்து, தொடர்ந்து முன்னிலையில் இருக்கும்.

“அம்மா வழியில் ஆட்சி,  அனைத்து துறைகளிலும் வளர்ச்சி” என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் இந்த அரசு பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து, ஒவ்வொரு துறையிலும்  மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வளர்ச்சிப் பாதையில் பீடு நடைபோட்டு வருகிறது. 

ஓய்வு ஊதியம் உயர்வு:-

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களது இன்னுயிரை ஈந்த தியாக செம்மல்களை சிறப்பிக்கும் வகையில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 16,000 ரூபாயிலிருந்து 17,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதையும், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் மற்றும் சிறப்பு ஊதியம் 8,000 ரூபாயிலிருந்து 8,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டு மக்கள் முழு ஆரோக்கியத்துடனும், நலமும், மகிழ்ச்சியும் நிறைந்து வாழ்வதற்காக பொருளாதார, சமூக, சட்ட ரீதியாக உங்களின் அரசு, துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இது மக்களுக்கான அரசாக, மக்களுடன் என்றென்றும் இணைந்திருக்கும் என்பது உறுதி. உங்களின் அன்பையும், ஆதரவினையும் பெற்றுள்ள நான், தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, அல்லும் பகலும் உங்களுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன் என்று இந்த நன்னாளில் நான் மீண்டும் உறுதிபட கூறுகிறேன். 

இன்று கொரோனா வைரஸ் தொற்றினால் உலக மக்கள் அனைவரின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றின் பிடியிலிருந்து அனைவரும் விரைவில் மீண்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இந்நந்நாளில் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது சுதந்திர தின நல் வாழ்த்துகளை உரித்தாக்குகின்றேன் இவ்வாறு அவர் பேசினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து