அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அ.தி.மு.க. செயற்குழு 28-ம் தேதி கூடுகிறது: உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அழைப்பு

வெள்ளிக்கிழமை, 18 செப்டம்பர் 2020      தமிழகம்
EPS-OPS 2020 09 18

Source: provided

சென்னை : அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 28.09.2020 திங்கட்கிழமை காலை 9.45 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கழகத்தில் கட்சியின் அவைத் தலைவர் இ. மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, அ.தி.மு.க., தயாராகி வருகிறது. அதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., - துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ஆகியோர் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை துவங்கிய அவசர உயர்நிலைக்குழு கூட்டம் இரவு 7 மணியளவில் நிறைவு பெற்றது.

இந்த கூட்டத்தில் பொதுக் குழுவை கூட்டுவது குறித்தும், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் செயல்படுத்த வேண்டிய பணிகள் மற்றும் இதர பணிகள் குறித்து நேற்று நடந்த அ.தி.மு.க. உயர்மட்டக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை கட்சித் தொண்டர்கள் பூச்செண்டு கொடுத்தும், கோஷமிட்டும் வரவேற்றனர். 

இந்த கூட்டத்திற்கு பிறகு அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 28.09.2020 திங்கட்கிழமை காலை 9.45 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கழகத்தில் கட்சியின் அவைத் தலைவர் இ. மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.

கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, இன்னும் சில மாதங்களே உள்ளதால், ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க., தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை துவங்கி விட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

எனவே வரும் 28-ம் தேதி நடக்க உள்ள செயற்குழு கூட்டத்தில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து