முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.யில் தொற்று நோய் திருத்த மசோதா நிறைவேற்றம்: மருத்துவ பணியாளர்களை தாக்கினால் 5 வருடம் வரை தண்டனை கிடைக்கும்: மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

சனிக்கிழமை, 19 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற மேலவையில் தொற்று நோய் திருத்த மசோதா 2020 நிறைவேற்றப்பட்ட பின்னர் அவை இன்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மருத்துவ பணியாளர்களை அவமதித்தாலோ தாக்கினாலோ, 3 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது. 

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.  இதில் பல்வேறு விவகாரங்களை இரு அவை உறுப்பினர்களும் எழுப்பி வருகின்றனர்.  பாராளுமன்ற கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். 

இந்த நிலையில், மேலவையில் ஹோமியோபதி மத்திய கவுன்சில் (திருத்த) மசோதா 2020, இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (திருத்த) மசோதா 2020 மற்றும் அமைச்சர்களுக்கான சம்பளம் மற்றும் படிகள் (திருத்த) மசோதா 2020 உள்ளிட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு வழியே நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக நேற்றும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.  நேற்று காலை மேலவை தொடங்கிய பின்பு, மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்சவர்தன் தொற்று நோய் திருத்த மசோதா 2020-க்கான தீர்மானத்தினை அவை பரிசீலனைக்காக தாக்கல் செய்தார். இதற்கு அவையின் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. 

உறுப்பினர்கள் ஒப்புதலை தொடர்ந்து மேலவையில் இந்த திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன்பின்னர் அவையை இன்று காலை ஒத்தி வைக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.  இதன்படி, மேலவை இன்று காலை 9 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக அவர் பேசுகையில், ‘கொரோனாவுடன் தொடர்புடைய சூழ்நிலை காரணமாக பல மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள்  உள்ளிட்டோர் அவமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைமை குறித்து ஆராய்ந்த மத்திய அரசு, இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக ஒரு சட்டம் தேவை என்பதை கண்டறிந்து, சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.  

மசோதாவை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் பேசும் போது, ‘நீங்கள் இப்போது தான் சுகாதார ஊழியர்களைப் பற்றி நினைத்தீர்களா? மேற்கு வங்காளத்தில் இதற்காக ஒரு சட்டம் உள்ளது. மத்திய அரசின் சட்டத்தால் என்ன நடக்கும்? இந்த மசோதா மாநிலங்களின் அரசியலமைப்பு ரீதியாக ஒதுக்கப்பட்ட செயல்பாட்டை ஆக்கிரமிக்கும் முயற்சியாகும் என்றார்.

இந்த சட்ட மசோதாவை ஆதரித்து பேசிய பா.ஜ.க. உறுப்பினர் சரோஜ் பாண்டே, சுகாதாரத்துறையினர் மீதான தாக்குதலை தடுக்க இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். ‘நாங்கள் அவர்கள் மீது பூக்களை தூவி வரவேற்றோம். சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினரை தொற்றுநோயில் இருந்து பாதுகாக்க விரும்பியதால், அவர்களை பல மாதங்களாக சந்திக்காமல் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சட்டத்திருத்தம், ஆபத்தான தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க உதவுவதுடன், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்கிறது. இதுபோன்ற நோய்கள் பரவாமல் தடுக்க மத்திய அரசின் அதிகாரங்களை விரிவுபடுத்துகிறது. சுகாதாரப் பணியாளர்களை அவமதித்தாலோ தாக்கினாலோ, 3 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து