இந்தியாவிலேயே முதன் முதலாக திட்டம் அறிமுகம்: 3501 அம்மா நகரும் நியாயவிலை கடைகள்: முதல்வர் எடப்பாடி இன்று துவக்கி வைக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2020      தமிழகம்
Edappadi 2020 09 20

Source: provided

சென்னை : நகர்ப்புற, கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகைகள் 3501 அம்மா  நகரும் நியாய விலைக்கடைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். 

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது பல்வேறு திட்டங்களை தமிழக மக்களுக்காக அறிமுகப்படுத்தினார். அவற்றில் அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமிண்ட் போன்ற பல்வேறு திட்டங்கள் அடங்கும். இவற்றில் அம்மா உணவகம் ஏழை, எளிய மக்களின் மத்தியில் மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.

அதே போல ரூ. 10-க்கு வழங்கப்படும் அம்மா குடிநீர் வெளியூர் செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இன்றளவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. 

தமிழக சட்டசபையில் 2020-21-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின் போது அவை விதி 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்கும் பொருட்டு 3,501 அம்மா நகரும் ரேசன் கடைகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த வகையில் கிராமப்புற, நகர்ப்புற மற்றும் மலைவாழ் மக்கள் பயன்பெறுகின்ற வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களது குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யும் வகையில் ஒரு புதிய திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இன்று அமல்படுத்துகிறது. இந்த திட்டம் இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில்தான் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

3501 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் துவக்க விழா மற்றும் பொது விநியோக திட்டத்தின் கீழ் முன்னோட்ட அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்ட விழா ஆகிய விழாக்கள் இன்று திங்கட்கிழமை காலை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அம்மா நகரும் நியாய விலைக்கடைகளை துவக்கி வைக்கிறார். 

இந்த விழாவிற்கு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா. காமராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். விழாவில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரிய தலைவர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில் தலைமை செயலாளர் சண்முகம், கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இந்த அம்மா நகரும் நியாய விலைக்கடைகளும் ஏழை, எளிய மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து