முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் விரட்டி அடிக்கப்படுவார்கள்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எச்சரிக்கை

சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : அ.தி.மு.க.வில் தவறு செய்கிறவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை காமராஜர் சாலையில் தனியார் கல்யாண மண்டபத்தில் சவுராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் பங்கு முதலீடு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு வங்கியின் பெருந்தலைவர் டி.எஸ். சாரதி தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜேஷ் வரவேற்றார். முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ். ராம்பாபு துவக்க உரையாற்றினார்.

இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கலந்து கொண்டு பங்குத் தொகை சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது, 

சவுராஷ்டிரா வங்கி 2011-ல் சிக்கலில் இருந்த போது முதல்வர் அம்மாவிடம் எடுத்து சொல்லி ரூ. 2 கோடியே 30 லட்சம் நிதியினை பெற்று தந்தேன். இந்த சமுதாயத்தினர் பாசம் உள்ளவர்கள். அதுவும் அ.தி.மு.க.வுக்கு விசுவாசமானவர்கள். எனவே நாங்கள் உங்களை மறக்க மாட்டோம். எம்.ஜி.ஆருக்காக திரைப்படத்தில் பாடல்களை பாடிய டி.எம்.எஸ். சவுராஷ்டிரா சமுதாயத்தை சேர்ந்தவர். எம்.ஜி.ஆரின் முன்னேற்றத்திற்கு டி.எம்.எஸ்-சின் குரலும் ஒரு காரணமாகும்.

சவுராஷ்டிரா சமுதாயம் அமைதியாக உழைக்கின்ற சமுதாயம். அவர்களிடம் ஏமாற்று வேலை இருக்காது. எப்போதும் நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள். அம்மாவின் அரசை முதல்வர் எடப்பாடியாரும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் சிறப்பாக வழிநடத்தி செல்கிறார்கள். அவர்களது ஆட்சிக்கு நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். 

தி.மு.க. ஆட்சியில் ரவுடியிசம் இருந்தது. நில அபகரிப்பு போன்ற பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. நான் 10 ஆண்டு காலம் அமைச்சராக இருக்கின்றேன். என்னிடம் ஒரு ரவுடி கூட இருக்க முடியாது. இந்த இயக்கத்திற்காக யார் விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்களை உயர்ந்த இடத்தில் வைப்போம்.

கட்சியில் யார், யார் தவறு செய்கிறார்களோ அவர்களை பக்கத்தில் வைக்காமல் விரட்டி விட்டு விடுவோம். தி.மு.க.வின் ரவுடியிசத்தை மீண்டும் பார்க்க மக்கள் அவர்களை ஆட்சிக்கு வர அனுமதிக்கக் கூடாது. மிரட்டும் கட்சி, ஆட்சி யாருடையது என்பது உங்களுக்குத் தெரியும். தமிழக மக்களுக்காக எதை செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறோம்.

அ.தி.மு.க. ஆட்சியில் மதுரையின் வளர்ச்சி அபரிதமாக உள்ளது. மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக உள்ளது. மக்களுக்கான திட்டங்களையெல்லாம் நாங்கள் ஆதரிக்கிறோம். மக்களுக்கு விரும்பாத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.  தமிழகத்தில் மிகச் சிறந்த நிர்வாகம் செய்வதாக பிரதமர் மோடியே முதல்வர்  எடப்பாடி பழனிசாமியை பராட்டியுள்ளார்.  

அ.தி.மு.க. என்ற கட்சி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வளர்த்த கட்சி. ஒருபோதும் மக்களை மறக்க மாட்டோம். எம்.ஜி.ஆர். தான் எனது குரு. எனக்கு சிறுவயதிலேயே தந்தை இறந்து விட்டார். தாயின் அரவணைப்பில் தான் வளர்ந்தேன்.  இக்காலத் திரைப்படங்களைப் பார்த்தால் பிள்ளைகள் கெட்டுப் போய் விடுவார்கள். அன்றைக்கு திரைப்படங்கள் பார்த்துதான் நல்ல குழந்தைகள் உருவானார்கள். தடம் மாறாமல் நேர்வழியில் செல்ல அன்றைய திரைப்படங்கள் தான் உதவின.

சவுராஷ்டிரா சமுதாயத்தினர் எப்போதும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகவே இருப்பார்கள். எனவே அம்மா இருந்த காலங்களில் இந்த சமுதாயத்திற்கு ஆதரவாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். சட்டசபை தேர்தலில் பல முறை இந்த சமுதாயத்திற்கு வாய்ப்பு அளித்துள்ளார். எனவே நீங்கள் நன்றியை மறக்க கூடாது.

எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.கவை நீங்கள் ஆதரிக்க வேண்டும். சவுராஷ்டிரா சமுதாய மக்கள் பொருளாதாரம் முன்னேற்றம் அடைய இந்த வங்கியின் வளர்ச்சிக்காகவும் சமுதாய வளர்ச்சிக்காகவும் நான் நிச்சயம் குரல் கொடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து