முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடைகள் குறைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் படிப்படியாக இயல்புநிலை வருவதற்கு முழுமையான நடவடிக்கை : முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

செவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஏற்கனவே இருந்த தடைகளெல்லாம் படிப்படியாக குறைக்கப்பட்டு, தளர்வுகள் அளிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் படிப்படியாக இயல்புநிலை வருவதற்கு அரசால் முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார். 

முதல்வர் உரை

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆய்வினை தொடங்கி வைத்து ஆற்றிய உரை வருமாறு.

கோவிட் வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அம்மாவின் அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றது. அதனால் தான், பாரதப் பிரதமர்  தமிழ்நாட்டை பார்த்து பிற மாநிலங்கள் செயல்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாராட்டினை தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தர அயராது களப்பணியாற்றும் அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

கபசுர குடிநீர்

களப்பணியில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும், கட்டுப்பாட்டு பகுதியில் வாழும் மக்களுக்கும், ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இந்திய முறை மருத்துவ சிகிச்சையும் நோயாளிகளுக்கு சிறப்பாக அளிக்கப்படுகின்றது.

நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதற்காக சித்த மருந்தான கபசுர குடிநீர் பெரும்பான்மையான மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் காப்பீட்டு திட்ட பயனாளிகள் மற்றும் அரசு காப்பீட்டு திட்ட பணியாளர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு, தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி மற்றும் கைகளை முறையாக கழுவுதல் ஆகியவற்றை உறுதிபடுத்தியுள்ளது. 

பொதுமக்களிடம் காய்ச்சல், சளி, வறட்டு இருமல், மூச்சுத் திணறல், உடல் சோர்வு, தலைவலி, நாக்கில் சுவை இழப்பு, மூக்கில் நுகர்வுத் தன்மை இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் 24 மணி நேரத்திற்குள் மருத்துவமனை செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வை மாவட்ட ஆட்சியர்கள் ஏற்படுத்த வேண்டும். கோவிட் பரிசோதனையின் போது மூத்த குடிமக்கள் மற்றும் இணை நோய் உள்ளோரின் மாதிரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டு, விரைந்து முடிவுகளை அறிவிக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் நோய் சிகிச்சை குறித்த நிலையான வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கோவிட் சிறப்பு மையங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. அம்மையங்கள் பொதுமக்களுக்கு மேலும் சிறப்பான சேவைகளை வழங்க உணவு, குடிநீர், கழிப்பிட வசதிகளை அவ்வப்போது மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு குறைவான இறப்பு விகிதத்தை கொண்டு இருந்த போதிலும், இறப்பு விகிதத்தை மேலும் குறைக்கும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். 

படிப்படியாக தளர்வுகள்

தமிழ்நாடு முழுவதும் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்த அம்மாவின் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கொரோனா காலத்தில் கூட, இதுவரை 42 புதிய தொழில் திட்டங்கள் தமிழ்நாட்டில் துவங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இதன் மூலம், சுமார் 31,464 கோடி ரூபாய் முதலீடும், சுமார் 69,712 புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட உள்ளன. இந்நடவடிக்கைகளால், ஏப்ரல் முதல் ஜூன் 2020 காலங்களில் அதிக புதிய முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பதை ஒரு தனியார் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இக்கொரோனா காலகட்டத்தில் ஏப்ரல் முதல் இதுவரை, 2,37,090 சுய உதவிக் குழுக்களுக்கு, 8,557 கோடி ரூபாய் வங்கி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் தனியே கொரோனா நோய்த் தொற்று காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 87,327 சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் 954.80 கோடி ரூபாய் அளவிலான பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வருமானத்தை பெருக்கவும் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளை களைய 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

பருவமழை காலம்  

தற்போது, பருவமழை காலம் தொடங்க உள்ளது. பருவ காலம் ஆரம்பிக்கும் முன்னதாகவே நகர்ப்புர/ஊரக பகுதிகளில் குடிநீர், சாலை வசதி, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி, பருவ கால சவால்களை திறம்பட கையாள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

நாம் முன்னரே திட்டமிட்டு நீர்நிலைகளை தூர் வாரியது, ஆழப்படுத்தியது, வாய்க்கால்களை சீரமைத்தது போன்ற பணிகளினால், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு 4 லட்சத்து 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை வேளாண் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த நான்கு ஆண்டுகளில் குடிமராமத்துத் திட்டத்தின் மூலமாக 1,433 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6,278 நீர்நிலைகள் புனரமைக்க எடுத்துக் கொள்ளப்பட்டு, பெரும்பான்மை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. போதிய அளவில் வேளாண் இடுபொருட்கள் இருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே, வேளாண் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து, வரலாறு காணாத அளவிற்கு இந்த ஆண்டு 11 வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும் என உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

வரலாற்று சாதனையாக அம்மாவின் அரசு 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற்று மிகக் குறுகிய காலத்திலேயே அவற்றிற்கான கட்டுமானப் பணிகளை துவக்கி உள்ளது.

நான் ஏற்கனவே கடந்த கூட்டத்தில் அறிவுறுத்தியது போல அப்பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் கள் ஆய்வு செய்து, பணியினை மேலும் துரிதப்படுத்த வேண்டும். அதேபோல, தமிழகத்தில் 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, இப்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதையும் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

அதோடு, மக்களுடைய கோரிக்கையை ஏற்று பொதுப் போக்குவரத்தையும் அனுமதிக்கப்பட்டு மக்கள் தமிழ்நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்தின் மூலமாக பயணம் செய்வதற்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதனால், பொதுமக்கள் தமிழகத்தில் எல்லா பகுதிகளுக்கும் சென்று வருவதற்கும் அம்மாவின் அரசால் தளர்வுகள் அளிக்கப்பட்டன.

அதனால், வேலைக்கு செல்பவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கு செல்பவர்களுக்கும் எளிதாக்கப்பட்டு இருக்கிறது அதோடு, பல்வேறு ரயில்கள் இயக்குவதற்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. விமானப் போக்குவரத்து ஏற்படுத்துவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கின்றன.

ஆகவே, ஏற்கனவே இருந்த தடைகளெல்லாம் படிப்படியாக குறைக்கப்பட்டு, தளர்வுகள் அளிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் படிப்படியாக இயல்புநிலை வருவதற்கு அரசால் முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்ற செய்தியை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

அரசின் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் பொதுமக்களுக்கும், செம்மையான முறையில் பணியாற்றி வருகின்ற அனைத்து அரசு அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து