எதிரிகள், துரோகிகள் நினைப்பது போன்று அ.தி.மு.க.வில் எதுவும் நடக்காது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்த நாளையொட்டி சென்னை அடையாறில் உள்ள சிவாஜிகணேசன் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
ஏராளமான திரைப்படங்களில் நடித்து, பல தலைவர்களை கண்முன் நிறுத்திய சிவாஜிக்கு புகழ் சேர்க்கும் வகையில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சிவாஜி போல தமிழ் உச்சரிக்க முடியாது. சிவாஜியின் ஸ்டைல் தனக்கு மிகவும் பிடிக்கும். முதல்வர் எடப்பாடி பழனிசாமியே எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் முதலமைச்சராக நீடிப்பார் என கட்சியின் கட்டுப்பாடுகள் தெரியாமல் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து தெரிவித்து உள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வீட்டில் ஆலோசனை நடத்துவதில் எந்த தவறும் இல்லை. எதிரிகள், துரோகிகள் நினைப்பது போன்று அ.தி.மு.க.வில் எதுவும் நடக்காது. கட்சியின் நலன் கருதி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.