இலங்கை பிரதமரின் பாதுகாப்பு பிரிவுக்கு பயிற்சி அளித்த கருப்பு பூனைப்படை

ஞாயிற்றுக்கிழமை, 18 அக்டோபர் 2020      உலகம்
Black-Cat 2020 10 18

Source: provided

குர்கான் : கருப்பு பூனைப்படை எனப்படும் தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.), கடந்த 1984-ம் ஆண்டு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக விசேஷமாக உருவாக்கப்பட்டது.  மிக மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதும் அதன் பணி ஆகும்.

அந்த படையின் 36-வது ஆண்டு தினம், டெல்லி அருகே குர்கானில் உள்ள அதன் முகாமில் நடைபெற்றது. அதில், தேசிய பாதுகாப்பு படையின் தலைமை இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) எஸ்.எஸ்.தேஸ்வால் பங்கேற்று பேசினார்.

அவர் பேசியதாவது:- பயங்கரவாதம் என்பது சிக்கலானதாகவும், உலக பிரச்சினையாகவும் ஆகிவிட்டது. பயங்கரவாதிகளின் வியூகங்கள் மாறிவிட்டன. நவீன ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள்.

ஆகவே, அவர்களை சமாளிக்க தேசிய பாதுகாப்பு படை, தனது ஆயுத பலத்தையும், தொழில்நுட்பத்திறனையும், பயிற்சி திறனையும் பல மடங்கு அதிகரித்துவிட்டது.

தேசிய பாதுகாப்பு படையில், நெருக்கமான பாதுகாப்பு படை என்ற பிரிவு உள்ளது. அந்த படை, தற்போது 13 முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது. கொரோனா காலத்திலும், அந்த பிரமுகர்கள் பங்கேற்ற சுமார் 4 ஆயிரம் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு அளித்துள்ளது.

மேலும், இலங்கை பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் படைப்பிரிவைச் சேர்ந்த 21 பேருக்கு இந்த படை, நெருக்கமாக பாதுகாப்பு அளிக்கும் நுணுக்கங்கள் குறித்து பயிற்சி அளித்துள்ளது. இந்த பயிற்சிக்கு பாராட்டு தெரிவித்து இந்திய பிரதமருக்கு இலங்கை பிரதமர் கடிதம் எழுதி உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து