தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழைக்கு 70 பேர் பலி

திங்கட்கிழமை, 19 அக்டோபர் 2020      இந்தியா
Telangana 2020 10 19

Source: provided

ஐதராபாத் : தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழை தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி 70 பேர் பலியாகி உள்ளனர். 

வடகிழக்கு பருவமழையையொட்டி தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. எனினும், தெலுங்கானாவில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட 24 மணிநேரத்தில் பெய்த கனமழையானது (72.5 மி.மீ.), கடந்த 10 ஆண்டுகளில் அக்டோபரில் பெய்த 3-வது அதிக மழை பொழிவாகும். 

தெலுங்கானாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதனால், முதல்வர் கே.சந்திரசேகர ராவ் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண தொகை அறிவித்து உள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட, தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் ஏழைகளுக்கு நிதியுதவியாக தலா ரூ.10 ஆயிரம், மழையால் முழுவதும் சேதமடைந்த அனைத்து வீடுகளுக்கும் ரூ.1 லட்சம், பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.50 ஆயிரம் என நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். 

இந்நிலையில், வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த நிலை உருவாக கூடும் என கூறப்படுகிறது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய சாத்தியம் உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழை தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி கடந்த ஒரு வாரத்தில் 70 பேர் பலியாகி உள்ளனர் என்று மாநில அமைச்சர் கே.டி. ராமாராவ் நேற்று கூறியுள்ளார். 

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறிய நிலையில், தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் நகர மக்கள் தங்களது வாழ்விடங்களை விட்டு நிவாரண முகாம்களுக்கு செல்லும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கனமழைக்கு ஐதராபாத் பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் 33 பேர் பலியாகி உள்ளனர். பிற மாவட்டங்களை சேர்ந்த 37 பேர் உயிரிழந்துள்ளனர் என முதல்வர் தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து