3 லட்சம் சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 27 அக்டோபர் 2020      இந்தியா
modi 2020 10 27

Source: provided

புதுடெல்லி : 3 லட்சம் சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 

கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உதவும் வகையில் ஸ்வநிதி திட்டத்தை கடந்த ஜூன்  மாதம் 1-ம் தேதி முதல் மத்திய அரசு தொடங்கியது. 

அதன்படி, தெரு, தெருவாக சென்று வர்த்தகத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கான பிரதமரின் கடனுதவி திட்டத்தின் கீழ் 3 லட்சம் வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி இன்று(நேற்று)  நடைபெறுகிறது.

இதில் பங்கேற்கும் பிரதமர் மோடி, கடனுதவிகளை வழங்க உள்ளார் என்று தகவல் தொடர்பு துறை கூடுதல் தலைமை செயலாளர் நவநீத் சினேகல் தெரிவித்திருந்தார்.

அதன்படி, நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி டெல்லி இருந்தபடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று 3 லட்சம் வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கினார். தொடர்ந்து, காணொலி காட்சி வாயிலாக பயனடைந்த வியாபாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.   

இத்திட்டத்தின் அடிப்படையில் பயனாளருக்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரையில் கடனுதவி வழங்கப்படும். இந்த திட்டம் 50 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு பயனளிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடனை சரியான நேரத்தில்  திருப்பிச் செலுத்துபவர்களுக்கு 7 சதவீத வருடாந்திர வட்டி மானியமும் வழங்கப்படும்.

மேலும், இந்த திட்டத்தின் கீழ் அபராதம் எதுவும் விதிக்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள  நிலையில், மொபைல் செயலி மற்றும் இணையதளம் மூலமாகவும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து