38 நாடுகளில் உள்ள 300 தமிழ் சங்கங்களின் 10 ஆயிரம் பேர் பங்கேற்பு: தமிழ் தொழில் அதிபர்களை ஒருங்கிணைக்கும் மாநாடு : ஆன்லைன் மூலம் நாளை முதல் 3 நாட்கள் நடக்கிறது

செவ்வாய்க்கிழமை, 27 அக்டோபர் 2020      தமிழகம்
RM-Arun 2020 10 27

Source: provided

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் யாதும் ஊரே முன்னெடுப்பின் தொடர்ச்சியாக நாளை 29-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் கருத்தரங்க மாநாடு ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, கடந்த ஆண்டு அமெரிக்காவுக்குச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு யாதும் ஊரே என்ற முயற்சியைத் தொடங்கி வைத்தார்.

இந்த முயற்சியின் தொடர்ச்சியாக  உலகத் தமிழர்கள் பல்வேறு தரப்பினரும் தமிழகத்தில் முதலீடுகளைச் செய்ய வழிவகுத்திடும் இணைய வழி கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. யாதும் ஊரே மாநாடு ஆன்லைனில் நாளை 29-ம்  தேதி முதல் 3 நாள் நடைபெறுகிறது.  38 நாடுகளில் உள்ள 300 தமிழ் சங்கங்களின் 10 ஆயிரம் தொழில் வல்லுனர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

வெளிநாட்டில் வாழும் தமிழ் தொழில் அதிபர்களை ஒருங்கிணைக்கும் மாநாடு இது. இதன் மூலம் தமிழ்நாட்டில் பொருளாதாரம் வளரும். இந்த மாநாட்டில் 3டி கண்காட்சி மூலம் நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டு புதிய தொழில் திட்டம் துவங்கவும், முதலீட்டாளர்கள் தொழில் துவங்க வழிகாட்டுதல்களையும் பெறுவர் என்று தென்னிந்திய வர்த்தக சபை தலைவர் ஆர்.எம்.அருண் தெரிவித்தார்.

தமிழக அரசு, தென்னிந்திய தொழில் வர்த்தக சம்மேளனம் ஆகியன இணைந்து இந்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளன. தொழில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள், சேவை வழங்குபவர்கள், உற்பத்தியாளர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், அரசுத் துறையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து