முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: 2,668 அடி உயர மலை உச்சியில் இன்று மகா தீபம்

சனிக்கிழமை, 28 நவம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி 2,668 அடி உயர மலை உச்சியில் இன்று மகா தீபம் ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

இதையொட்டி மகா தீபம் ஏற்றப்பட உள்ள 198 கிலோ எடை கொண்ட கொப்பரை தீப நாட்டார் சமூகத்தினரால் புதுப்பிக்கப்பட்டு மலை உச்சிக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது.  முன்னதாக மகா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 20-க்கும் மேற்பட்டவர்கள் சுமந்து கொண்டு மலை உச்சிக்கு சென்றனர். மகா தீபம் ஏற்றப் பயன்படுத்த உள்ள 11 ஆயிரம் மீட்டர் காடா துணியால் ஆன திரி, ஆவின் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 3,500 கிலோ நெய், 10 கிலோ கற்பூரம் ஆகியவற்றையும் மலை உச்சிக்கு கொண்டு சென்றனர். 

இன்று அதிகாலையிலேயே கோவில் நடைதிறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற உள்ளது. அதிகாலை 4 மணியளவில் அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படும்.  இதையடுத்து பிரம்ம தீர்த்தத்தில் சுப்பிரமணியர் சுவாமி தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலையில் பஞ்சமூர்த்திகள், சாமி சன்னதி முன்பாக எழுந்தருள்வார்கள். பின்னர் மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து காட்சி தருவார். அப்போது, சாமி சன்னதி முன்பு அகண்டதீபமும், அதேநேரத்தில் மலைஉச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது. மகா தீபம் காண திருவண்ணாமலை நகருக்கு வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மகா தீபத்தை காண பக்தர்கள் மலையேறவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.  கோவில் ஊழியர்கள், காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், சிவாச்சாரியா்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார். 

கார்த்திகை மாதத்துக்கான பவுர்ணமியையொட்டி இன்றும், நாளையும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. முன்னதாக திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த், மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த ஆண்டு அனைத்து நிகழ்வுகளும் தொலைக்காட்சி, அரசு கேபிள் டி.வி., உள்ளூர் கேபிள் டி.வி., யூ– டியுப் மற்றும் திருக்கோயில் இணைய தளம் மூலமாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கொரோனா பாதுகாப்பு கருதி வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு 28, 29, 30-ம் தேதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க 15 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை நகரம் மற்றும் சுற்றியுள்ள பொது மக்கள் தீபத் திருவிழாவினை தங்கள் வீடுகளிலிருந்து தரிசனம் செய்திடுமாறும், பொது மக்கள் நகரின் எந்தவொரு பகுதியிலும் தேவையின்றி கூடாமலும், கூட்ட நெரிசல் ஏற்படுத்தாமலும், தகுந்த ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் 2,700 போலீசார் ஈடுபடுகின்றனர்.  இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து