சபரிமலைக்கு தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு கால பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. நவம்பர் 17-ம் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக சபரிமலையில் பல கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை உள்ள ஐந்து நாட்கள் தினமும் ஆயிரம் பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 2 ஆயிரம் பக்தர்களும், மகரவிளக்கு அன்று 5,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என முதலில் அறிவிக்கப்பட்டது. இதற்கான ஆன்லைன் புக்கிங் கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கியது. புக்கிங் தொடங்கிய 2 மணி நேரத்தில் அனைத்து நாள்களுக்குமான டிக்கெட்டுகள் முழுவதும் புக்கானது. இதனால் வேறு பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் சபரிமலையில் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேரள அரசிடம் முன்வைத்தது. இதையடுத்து தினமும் கூடுதலாக 1,000 பக்தர்களை அனுமதிக்க கேரளா அரசு அனுமதி அளித்தது. அதாவது திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை உள்ள ஐந்து நாள்கள் தினமும் 2 ஆயிரம் பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 3 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்தார். இந்த நிலையில் பக்தர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு ஏராளமான கோரிக்கைகள் வந்தன. அதனை தொடர்ந்து கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாகக் கேரள ஐகோர்ட்டில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் சபரிமலையில் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்கக் கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வரும் 20-ம் தேதி முதல் தினமும் 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார். நீதிமன்ற ஆணை கிடைத்தவுடன் செயல்படுத்தப்படும் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. தற்போது பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது கோவில் நிர்வாகத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே வரும் 26-ம் தேதிக்குப் பின்னர் சபரிமலை செல்லும் பக்தர்கள் ஆண்டிஜன் பரிசோதனைக்குப் பதிலாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.