முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. மீதுதான் ஊழல் எனும் ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ளது: துண்டுச் சீட்டு இல்லாமல் விவாதம் நடத்த தயாரா? - கோவை பிரச்சாரத்தில் ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி சவால்

சனிக்கிழமை, 23 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

கோவை : தி.மு.க. மீதுதான் ஊழல் எனும் ஐ.எஸ்.ஐ. முத்திரை குத்தப்பட்டு விட்டது என்றும் அரசின் மீதான ஊழல் புகார் குறித்து துண்டுச்சீட்டு இல்லாமல் நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா என்றும் கோவையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்தார். 

கோவை ராஜவீதியில் நடைபெற்ற பிரமாண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொய்யான அறிக்கையை பத்திரிகை மூலமாக வெளியிடுகிறார். இவர் ஒரு அரசியல் தலைவரா? நேரடியாக அ.தி.மு.க.வை சந்திக்க திராணியில்லாத தலைவர் தி.மு.க. தலைவர். எங்கள் ஆட்சியில் என்ன திட்டங்கள் செய்தோமென்று அவர் சொன்னால் நியாயம். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்கள் செய்வோம் என்று சொல்லுங்கள். நீங்கள் ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை, அதனால் நீங்கள் சொல்லப் போவதும் இல்லை.  மக்களைக் குழப்பி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்க கூடாது. பாராளுமன்றத் தேர்தலில் ஏற்கனவே நீங்கள் போட்ட நாடகம் வெளிச்சத்திற்கு வந்து விட்டது. அப்போது மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று விட்டீர்கள். இப்போது மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். 

கோவை மாநகரத்தில் நான்கு திசைகளிலும் மக்கள் வெள்ளம் நிரம்புகின்ற காட்சியை பார்க்கும் போது மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டுமென்ற மக்களின் எண்ணம் தெரிகிறது. ஆனால் ஸ்டாலின், தான் போகும் இடங்களில் எல்லாம் மக்களின் முகத்தில் சிரிப்பு, மகிழ்ச்சி இருக்கிறது, ஆட்சிக்கு வருவதற்கு இதுவே அச்சாணி என்று சொல்கிறார். இது அச்சாணி அல்ல. மக்கள் அவரை கண்டு எள்ளி நகையாடி சிரிக்கிறார்கள்.

இதேபோல் 2019 பாராளுமன்றத் தேர்தலில் நாடகம் போட்டீர்கள், அதெல்லாம் என்னவாச்சு என்று கிண்டலாக மக்கள் சிரிக்கும் சிரிப்புதான் அந்த சிரிப்பு. அதை அவரால் உணர முடியவில்லை. ஸ்டாலின் நடத்தும் கூட்டத்தில் இருக்கும் மக்கள் பல கேள்விகளைக் கேட்கிறார்கள், அதற்கு முழுமையான பதிலை அவர் கொடுப்பாரா? என்றால் அதுவும் கிடையாது. கோயம்புத்தூரில் பாதியிலேயே எழுந்து சென்றார். ஆகவே, மக்கள் கேட்கின்ற கேள்விகளுக்குண்டான பதிலைச் சொல்வதுதான் தலைவருக்கு அழகு. அந்த நாகரிகத்தை கூட அவர் கடைபிடிக்கவில்லை.

2011- க்கு முன்பு கோவை மாநகரம் எப்படி இருந்தது? 2011 -க்குப் பிறகு இந்த 10 ஆண்டு காலத்தில் கோவை மாநகரம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். தராசு எடுத்து எடை போடுங்கள், நீதி வழங்குங்கள். நாங்கள் கேட்பது நாங்கள் செய்த சாதனைக்கு தேர்தல் மூலமாக நீங்கள் நற்சான்றிதழ் அளியுங்கள். தி.மு.க.வைப் போல குறை சொல்லி நாங்கள் வாக்குகளை கேட்கவில்லை, நாங்கள் இவைகளை செய்தோம், எங்களுக்கு வாக்களியுங்கள். இன்னும் இதைச் செய்யப் போகிறோம் என்று மக்களிடம் சொல்லி வாக்குகளைக் கேட்கின்றோம்.

நாட்டு மக்களுக்கு தேவையானவற்றை செய்ய வேண்டுமென்பதற்காக  எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோர் இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை, இருவரும் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாட்டிலே எவ்வளவோ அரசியல் கட்சித் தலைவர்கள் தோன்றி, வாழ்ந்து, மறைகின்றார்கள். ஆனால், வாழ்ந்த காலத்தில் அந்தத் தலைவர்கள் செய்த சாதனை, அவர்கள் மறைந்தாலும் இந்த மண்ணிலும், மக்கள் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பல்வேறு சாதனைகளைச் செய்து மக்கள் மனதிலே நீங்கா இடம் பெற்ற தலைவர்கள் அந்த இருபெரும் தலைவர்கள்.

தி.மு.க. தலைவர் குடும்பத்திற்காக வாழ்ந்த தலைவர். நம்முடைய தலைவர் மக்களுக்காக வாழ்ந்த தலைவர். மக்களுக்காக வாழ்ந்த தலைவருக்குத்தான் புகழ் ஓங்கும், நிலைக்கும். அந்தப் பெருமையை அ.தி.மு.க. தொண்டர்கள் பெற்றிருக்கின்றோம். இந்த இருபெரும் தலைவர்கள் செய்த எண்ணற்ற சாதனைகளினால், இன்று தமிழகம் உயர்ந்து நிற்கிறது. அந்த வழியில் அ.தி.மு.க. அரசு வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறது. 

துரதிர்ஷ்டவசமாக  அம்மா மறைந்து விட்டார். அப்போது, தி.மு.க. தலைவர் கட்சியை உடைக்க முயற்சி செய்தார், ஆட்சியைக் கவிழ்க்க தி.மு.க.வினர் நினைத்தார்கள். அனைத்தையும் அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் துணையோடு முறியடித்து சாதனை படைத்தோம். நான் முதல்வராக  பதவியேற்றபோது, எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி ஒரு மாதத்தில், 6 மாதத்தில் கவிழ்ந்து விடுமென்று ஸ்டாலின் சொன்னார். ஸ்டாலினுக்கு, நான்காவது ஆண்டு நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களுடைய அரசு, இருபெரும் தலைவர்கள் செயல்படுத்திய திட்டங்களை சிந்தாமல், சிதறாமல் செய்து கொண்டிருக்கிறது. பல வகைகளிலும், ஏழைகளுக்காக அம்மாவின் அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.  மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எங்களுடைய அரசு நிறைவேற்றி இருக்கிறது. 

கோவை மாநகரம், தொழில் வளம் மிகுந்த மாநகரம். தொழிலாளர்களுக்கு தேவையான வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக எங்களுடைய அரசு 2019-ம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் நடத்தி, சுமார் 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீட்டை ஈர்த்து 304 புதிய தொழில் துவங்குவதற்கு அடித்தளம் இட்ட அரசு அம்மாவுடைய அரசு. இந்த தொழில் நிறுவனங்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்கு வருவதன் மூலம், நேரடியாக 5 லட்சம் நபர்களுக்கும், மறைமுகமாக 5 லட்சம் நபர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆக 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க செய்த ஒரே அரசு அம்மாவுடைய அரசு.

கொரோனா பெருந்தொற்றின் சோதனையான காலத்திலும் ரூபாய் 60,000 கோடி முதலீட்டில் 74 நிறுவனங்கள் தொழில் தொடங்க அடித்தளமிட்ட அரசு அம்மாவுடைய அரசு. இதன்மூலமாக 1.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட தொடர்ந்து எங்களுடைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சியிலே கடுமையான மின்வெட்டு. மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்றே தெரியாது. மக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டனர். தொழில்கள் பாதிக்கப்பட்டது, தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். நமக்கு வரவேண்டிய தொழில்கள் எல்லாம் இந்த மின்தடையால் அண்டை மாநிலங்களுக்கு சென்றது.  அம்மா 2011-ம் ஆண்டிலே தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதன் மூலம் மின் மிகை மாநிலமாக தமிழகம் தற்போது திகழ்ந்து கொண்டிருக்கிறது. தடையில்லா மின்சாரம் தமிழகத்திலே கிடைக்கின்ற காரணத்தினாலேதான் புதிய, புதிய தொழிற்சாலைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு நாட்டிலே தடையில்லா மின்சாரம் கிடைத்தால் அங்கே தொழில் வளம் அதிகரிக்கும். அதைத் தான் நாங்கள் செய்திருக்கிறோம்.

இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இங்கு சாதி சண்டை கிடையாது, மதச்சண்டை கிடையாது, அனைத்து சமுதாயத்தினரும் அமைதியாக வாழ்கின்றனர். சட்டத்தின் ஆட்சி தமிழகத்திலே நடைபெற்று கொண்டிருக்கிறது. அமைதிப் பூங்காவாக தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதனால் தான் தொழில் துவங்க உகந்த மாநிலம் தமிழ்நாடு என்று தொழில் நிறுவனங்கள் தேர்ந்தெடுத்து இங்கே புதிய தொழில்கள் துவங்க விருப்பம் தெரிவித்து தொழில்கள் துவங்கப்பட்டு வருகிறது. 

தி.மு.க. ஆட்சியை போல இங்கே கட்டப்பஞ்சாயத்து கிடையாது. நில அபகரிப்பு கிடையாது. வியாபாரிகள் நிம்மதியாக வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். தொழிற்சாலைகள் நடத்துகின்ற தொழில் அதிபர்கள் நிம்மதியாக தங்கள் பணிகளை செய்து வருகிறார்கள். தி.மு.க. ஆட்சி வந்தால் மீண்டும் நில அபகரிப்பு ஏற்படும். கொலை, கொள்ளை, திருட்டு ஏற்படும். சுதந்திரமாக மக்கள் நடமாட முடியாது. அப்படிப்பட்ட ஒரு ஆட்சி தேவையா?. தி.மு.க. ஆட்சி வந்து விட்டால் மீண்டும் ரசீது புத்தகத்தை தூக்கிக் கொண்டு கடை கடையாக போவார்கள், தொழில் நிறுவனங்களுக்கு போவார்கள், மிரட்டுவார்கள், அந்த நிலை எல்லாம் வரக்கூடாது, இருந்தாலும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏமாந்து விடாதீர்கள். தி.மு.க. ஒரு அராஜக கட்சி.

அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் நடக்கிறது என்று சொல்கிறார் ஸ்டாலின். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சி தான். எனவே நீங்கள் எங்களை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது. ஊழல் என்னும் ஐ.எஸ்.ஐ முத்திரை உங்கள் மீது குத்தப்பட்டு விட்டது. அண்மையில் ஸ்டாலின் கவர்னரை சந்தித்து அமைச்சர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு அறிக்கையை கொடுத்தார்.  மக்களை குழப்பி, அமைச்சர்கள் மீது பழி சுமத்தி அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் ஸ்டாலின். 13 தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அதை மறைப்பதற்காக பொய்யான அறிக்கையை கவர்னரிடம் கொடுத்து, பத்திரிகையிலும், ஊடகத்திலும் செய்தி வெளியிட்டு மக்களை குழப்பி கொண்டிருக்கிறார். அ.திமுக அரசை பொறுத்தவரைக்கும் மடியிலே கனமில்லை, வழியிலே பயமில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகளை பரப்பி வருகிறார். நான் சவால் விடுக்கிறேன். எந்ததெந்த துறையில் என்னென்ன நடந்திருக்கிறது. நீ கேட்கிற கேள்விகளுக்கு நான் பதில் சொல்கிறேன். நான் கேட்கிற கேள்விகளுக்கு நீ பதில் சொல். எந்தவித துண்டுச்சீட்டும் இல்லாமல் நான் வருகிறேன். 

ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. எழுதி கொடுத்து படிக்கின்ற தலைவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். நாட்டு நடப்புகளை முதலில் ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும்.  இந்த அரசு செய்த திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். எங்கள் திட்டங்களில் ஏதாவது தவறு இருந்தால் சொல்லுங்கள், அதை திருத்திக் கொள்ள நாங்கள் தயார். தேர்தல் வருவதால் இப்படிப்பட்ட பொய்யான செய்தியை பரப்பி வருகிறார் ஸ்டாலின்.

தைப் பொங்கலை ஏழை எளிய மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2500 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் கொடுப்போம் என்று சொல்லவில்லை. சோதனையான காலத்தில் மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற நோக்கில் அம்மாவின் அரசு 2500 ரூபாய் வழங்கியது. அதைக்கூட பொறுக்க முடியாமல் அதை தடுத்திட ஸ்டாலின் திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நாட்டு மக்களுக்கு நன்மை செய்கின்ற அரசு அ.தி.மு.க. அரசு,  

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்களாகிய நீங்கள் உங்களது பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்திற்கு அளித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து அம்மாவின் ஆட்சி தொடர துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து