முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீட்டில் இருக்கும்போதும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படலாம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சனிக்கிழமை, 23 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பள்ளிகளைத் திறந்ததால் மட்டுமல்ல, வீட்டில் இருக்கும்போதும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், 10 மாதங்களுக்குப் பிறகு கடந்த 19-ம் தேதி திறக்கப்பட்டன. பொதுத்தேர்வை எழுத உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 

வகுப்புக்கு 25 மாணவர்கள், கட்டாய முகக்கவசம், தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலைப் பரிசோதனை உள்பட கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதற்கிடையே சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவருக்கு கடந்த 21-ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. 

இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் நேற்று சென்னையில் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன்,  98 சதவீதப் பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் மாணவர்களின் விருப்பத்துக்கேற்பவே தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

ஏதாவது ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை வைத்து, பள்ளிகள் திறப்பைக் குறித்துக் கருத்துக் கேட்பது சரியாக இருக்காது. மாணவர்கள் வீட்டில் இருக்கும் போதும் கொரோனா தொற்று வரலாம். விளையாடி கொண்டிருக்கும் போதும் வரலாம். ஏன், பள்ளிகள் திறக்காத போதும்கூட தொற்று ஏற்படலாம்.

தொற்றுப் பரவல் நிலையானது இல்லை.  ஏனெனில் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. தமிழகத்தில் நாம் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளை மட்டுமே திறந்திருக்கிறோம்.

பள்ளிகள் திறப்புக்கான பாதுகாப்புப் பணிகளை எல்லோரும் பாராட்டும் அளவுக்கு மேற்கொண்டிருக்கிறோம். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து