முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றம் பட்ஜெட் கூட்ட தொடர் இன்று துவங்குகிறது: ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு

வியாழக்கிழமை, 28 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்குகிறது. பிப்ரவரி 1-ம் தேதி தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்று முதல் பிப்ரவரி 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 2-ம் அமர்வு மார்ச் 8-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. 

இந்நிலையில், பாராளுமன்றத்தில் இன்று  ஜனாதிபதி உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. எதிர்க்கட்சிகள் இல்லாமல் பாராளுமன்றத்தில் பலவந்தமாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். 

இந்த முறை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் காகிதமில்லாத பட்ஜெட் கூட்டத்தொடராக அமையப் போகிறது. பட்ஜெட் தொடர்பான அனைத்து ஆவணங்கள், பொருளாதார ஆய்வறிக்கை போன்றவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யத் தொடங்கியதும், எம்.பி.க்களுக்கு ஆன்லைன் மூலம் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களாக மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டங்கள் காலாவதியாகிவிடும் என்பதால், இந்தக் கூட்டத்தொடரில் அதற்கான மசோதாக்களை அறிமுகம் செய்து மத்திய அரசு நிறைவேற்ற முயலும். 

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றிய விதம் பற்றியும், அதை திரும்பப் பெற வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் பாராளுமன்றத்தில் ஈடுபட நேரலாம். டெல்லியில் நடந்த கலவரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை அளித்தல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து