சென்னை : பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகை ஓவியா மீது பா.ஜ.க.வினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
நேற்று முன்தினம் சென்னை வந்த பிரதமர் மோடி தமிழகத்தில் ரூ.8126 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோபேக் மோடி என்ற ஹேஷ்டேக் உருவானது.
அதில் மோடிக்கு எதிராக கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இதில் நடிகை ஓவியாவும் மோடிக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த ஓவியா மீது பா.ஜ.க.வினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் அலெக்ஸ் சுதாகர், சி.பி.சி. ஐ.டி. சைபர் குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
சில அரசியல் கட்சிகள் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க ஹேஷ்டேக்கை உருவாக்கி உள்ளனர். பிரதமர் மோடியை குறிவைத்து நமது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை உருவாக்க சீனா, இலங்கை போன்ற நாடுகள் முயற்சி செய்கின்றன.
அவர்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நடிகை ஓவியா உள்ளிட்ட சிலர் செயல்படுகிறார்கள். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.