தமிழக அமைச்சர்கள் மீதான 2-வது ஊழல் பட்டியல் தொடர்பாக கவர்னரை, தி.மு.க. சந்திப்பது வெறும் அரசியல் நாடகமே என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அமைச்சரவை மீது ஸ்டாலின் ஊழல் புகார்களை தொடுத்து வருகிறார். டிசம்பர் 22-ம் தேதி தமிழக அமைச்சரவை மீது கவர்னரிடம் தி.மு.க. ஊழல் புகார்களை ஏற்கனவே கொடுத்துள்ளது.
இந்தநிலையில் சென்னை ராஜ்பவனில் கவர்னரிடம் நேற்று அமைச்சர்கள் ஊழல் செய்ததாக 2 -ம் கட்ட பட்டியலை தி.மு.க. அளிக்கிறது. இந்நிலையில் இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழக அமைச்சர்கள் மீதான 2-வது ஊழல் பட்டியல் தொடர்பாக கவர்னரை, தி.மு.க. சந்திப்பது வெறும் அரசியல் நாடகமே. அரசியல் காழ்ப்புணர்ச்சியால், கவர்னரை சந்தித்து பொய் புகார் அளிக்க முயற்சிக்கின்றனர். நேரடியாக வர சொல்லுங்கள், விவாதத்தை நடத்த சொல்லுங்கள், முகமூடியை கிழிக்கிறோம் நாங்கள்.இன்றைக்கு எங்கள் மடியில் கனம் ஒன்றுமில்லை என்பதனால்தான் வழியில் பயமில்லை என்ற அடிப்படையில் நாங்கள் நேருக்கு நேருக்கு தி.மு.க.வை விவாதம் நடத்த வர சொல்கிறோம். நேருக்கு நேர் வர தைரியம் இல்லாதவர்கள், கவர்னரை சந்தித்து மனு அளிக்க முயல்வது அரசியல் காழ்ப்புணர்ச்சி, விளம்பரம் நோக்கம் என்றும் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப கூறினால் உண்மையாகி விடும் என்பது அந்த காலம். இவ்வாறு அவர் கூறினார்.