ஒத்துழைப்பு தந்த துணை முதல்வருக்கு நன்றி: எதிர்க்கட்சியினர் கூட மூக்கின் மேல் விரலை வைத்து பாராட்டுகிற அரசு அ.தி.மு.க. அரசு: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பெருமிதம்

சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2021      தமிழகம்
Edappadi 2021 02-17

Source: provided

சென்னை : எதிர்க்கட்சியினர்கூட மூக்கின் மேல் விரலை வைத்துப் பாராட்டுகிற அரசு அ.தி.மு.க. அரசு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (பிப். 27) சட்டசபையில்  பேசியதாவது:-

எதிர்க்கட்சி உறுப்பினர்கள், குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள், எடப்பாடி பழனிசாமி ஆட்சி ஒரு மாதம்தான் இருக்கும், மூன்று மாதங்கள்தான் இருக்கும், ஆறு மாதங்கள்தான் இருக்குமென்று அவதூறான, உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களைச் செய்து வந்தனர்.  அதையெல்லாம் முறியடித்து, நான்காண்டு காலம் நிறைவுபெற்று ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்து, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை என் தலைமையிலான அ.தி.மு.க. அரசு வெற்றிகரமாக நிறைவேற்றி நாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

நான் பதவியேற்றதில் இருந்து இன்றுவரை நாட்டு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கியதன் மூலம், தமிழகம் இன்றைக்கு வெற்றிநடை போடும் தமிழகம் என்ற அளவுக்கு உயர்ந்து ஏற்றம் பெற்றிருக்கிறது. எதிர்க்கட்சியினர்கூட மூக்கின் மேல் விரலை வைத்துப் பாராட்டுகிற அரசு அ.தி.மு.க. அரசு என்பதை எடுத்துக் காட்டியுள்ளோம்.

இந்தச் சிறப்புமிகு ஆட்சிக்கு உறுதுணையாக விளங்கிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எனது மனமார்ந்த நன்றி. அதேபோல, அமைச்சர்கள் தங்கள் துறைகளில் திறமையாகச் செயல்பட்டு அதன் மூலம் தேசிய அளவில் விருதுகளைப் பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்து, அமைச்சர்கள் எனக்கு முழு ஒத்துழைப்பு நல்கியமைக்கு மனமார, உளமார நன்றி.

எனக்குப் பின்னாலும் அ.தி.மு.க. நூறாண்டு காலம் ஆளும் என்று சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சூளுரைத்தார். அதற்கேற்ப, இந்த சோதனையான நேரத்தில், நான்காண்டு காலம் நிறைவு பெற்று ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அளவுக்கு சிறந்த ஆட்சி, நிர்வாகம் அமைவதற்கு உறுதுணையாக விளங்கிய அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.

அதேபோல, ஆளும் கட்சி, எதிர்க்கட்சியிடையே சூடான விவாதங்கள் நடைபெற்ற போது, நடுநிலையாக இருந்து, பக்குவமாக, ஆளுமையாக, திறமையாகச் செயல்பட்டு, தமிழக சட்டப்பேரவை ஒரு முன்மாதிரி சட்டப்பேரவை என்று விளங்குகிற அளவுக்கு, அவையை நடத்திய சபாநாயகருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. அவருக்குத் துணையாக இருந்த துணை சபாநாயகருக்கும், அரசுக் கொறடாவுக்கும் நன்றி. 

அதே போல், அ.தி.மு.க. அரசு சிறப்பாகச் செயல்படுவதற்கு அனைத்து வழிகளிலும் துணை நின்ற உயர் அதிகாரிகளுக்கும், அரசின் திட்டங்களை நாட்டு மக்களுக்குச் செவ்வனே எடுத்துச் சென்று, அரசுக்கு நற்பெயரைத் தேடித் தந்த அரசு அலுவலர்களுக்கும் நன்றி. அதோடு, அ.தி.மு.க. அரசின் திட்டங்கள் சம்பந்தமாக ஒவ்வொரு துறையிலிருந்து வருகின்ற கோப்புகளை என்னிடத்தில் வேகமாக, துரிதமாக, உரிய நேரத்தில் சமர்ப்பித்து, அனுமதி பெற்று அனுப்பி வைத்த என்னுடைய துறைச் செயலாளர்களுக்கும் என் நன்றி.

அ.தி.மு.க. அரசு நான்கு ஆண்டு காலத்தை நிறைவு செய்கிறபோது, பல்வேறு திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி நாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளோம். 50 ஆண்டு காலம் தீர்க்கப்படாத காவிரி நதிநீர்ப் பிரச்சினையை சட்டப் போராட்டம் நடத்தி, தீர்ப்பைப் பெற்று அதனை நடைமுறைப்படுத்திய அரசு அ.தி.மு.க. அரசு. டெல்டா பாசன விவசாயிகள் பாதிப்படுகின்ற சூழ்நிலை வந்த போது, அ.தி.மு.க. அரசு டெல்டா பாசன விவசாயிகளுக்கு அரணாக இருந்து, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பைக் கொடுத்து, விவசாயிகளைப் பாதுகாத்த அரசும் அ.தி.மு.க. அரசுதான்.

அதே போல, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்கியதும் அ.தி.மு.க. அரசுதான். புயல், வெள்ளம் வந்த போதும், பருவம் தவறி மழை பெய்தபோதும் விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது, பாதிப்புக்குள்ளான விவசாயிகளை அரவணைத்து, அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கியதும் அ.தி.மு.க. அரசுதான். அது போல, விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் சேதமடைகின்ற போது, நாட்டிலேயே அதிகமாக இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தந்த அரசும் அ.தி.மு.க. அரசுதான். இன்றைக்கு அரசு விவசாயிகளைக் கண்ணை இமை காப்பது போலக் காத்தது என்று சொன்னால் அது மிகையாகாது. 

ஒரு மாநிலம் வளர்ச்சி பெறுவதற்கு தடையில்லா மின்சாரம் வேண்டும். அந்தத் தடையில்லா மின்சாரத்தை வழங்கி, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக உருவாக்கிய அரசு இது.  அதே போல, கல்வியில் வளர்ச்சி, புரட்சியை ஏற்படுத்தியதும் இந்த அரசுதான். அதிகமான சட்டக் கல்லூரிகளைத் திறந்திருக்கின்றது.

ஒரே நேரத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வரலாற்றுச் சாதனை படைத்திருக்கின்றோம். 3 கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைத் தொடங்கி சாதனை படைத்திருக்கின்றோம். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி என அதிகமான கல்லூரிகளைத் திறந்து, இன்றைக்கு உயர்க்கல்வி படிப்பதில் நாட்டிலேயே முதல் மாநிலம் என்ற பெருமையைப் பெற்றிருக்கின்றோம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வந்து, ஜெயலலிதாவின் கனவை நனவாக்கிய அரசு அ.தி.மு.க. அரசு.

அதுமட்டுமல்லாமல், தேசத்திற்காக உழைத்து மறைந்த ஒப்பற்ற தலைவர்களுக்குப் பெருமை சேர்க்கின்ற விதமாக, அவர்களுக்கு மணிமண்டபங்கள், திருவுருவச் சிலைகள் அமைத்தும், அரசு விழாக்கள் எடுத்தும், அவர்களுக்குப் புகழ் சேர்க்கின்ற விதமாக சட்டப்பேரவையில் அவர்களுடைய திருவுருவப் படங்களைத் திறந்தும் பெருமை சேர்த்த அரசு அ.தி.மு.க. அரசு. 

எல்லாவற்றுக்கும் மேலாக, எங்களையெல்லாம் இங்கே அமர வைத்த ஜெயலலிதாவுக்கு பிரம்மாண்டமான நினைவு மண்டபத்தை அமைத்ததும் அ.தி.மு.க. அரசுதான். அவர் வாழ்ந்த, கோயிலாகத் திகழக்கூடிய வேதா நிலையத்தை அரசு இல்லமாக அறிவித்ததும் இந்த அரசுதான். நான் முதல்வராகப் பதவியேற்ற காலத்திலிருந்து இன்று வரை பல்வேறு சாதனைகளைப் புரிந்து, சாதனை படைத்த அரசாக இந்த அரசு திகழ்கிறது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் கண்ட கனவுகளை நனவாக்குகின்ற விதமாக, வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் அதிமுக அரசு அமைப்போம். எங்களுடைய கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து