முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களுடைய மனநிலையை நன்கு புரிந்த செட்டியார் சமுதாயத்தினர் அ.தி.மு.க.வுக்கு பெரும் பக்கபலமாக இருந்து வருகிறார்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மக்களுடைய மனநிலையை நன்கு புரிந்த செட்டியார் சமுதாயத்தினர் அ.தி.மு.க.வுக்கு பெரும் பக்கபலமாக இருந்து வருகிறார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

சென்னை, இராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற தேசிய செட்டியார்கள் பேரவை மாபெரும் மாநில மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, 

வாணிபத்தையும், விவசாயத்தையும் முக்கிய தொழிலாகக் கொண்டு, தாங்களும் சிறப்பாக வாழ்ந்து, தமிழுக்கும், தமிழ்ச் சமுதாயத்திற்கும் பல்வேறு பண்பாட்டு கொடைகளை வழங்கிய செட்டியார் சமுதாய பெருமக்கள் அனைவரையும் வணங்கி, இந்த மாநாடு சிறக்க எனது வாழ்த்துகளை முதலில் உரித்தாக்குகிறேன்.  

தமிழ்நாட்டில் உள்ள செட்டியார் சமூகத்தில் 114-க்கும் மேலான உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேசிய செட்டியார்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி, நடத்தி வருவது மிகவும் பாராட்டுக்குரியது. இந்த அமைப்பில் இதுவரை ஆன்லைனில் மட்டும் சுமார் 25 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என்பதனை அறியும் பொழுது, இந்த அமைப்பு, இந்த சமுதாய மக்களிடையே  குறிப்பாக இளைஞர்களிடம் பெற்று வரும் ஆதரவும், வலிமையும் இதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. 

சுதந்திர போராட்ட வீரர் சிங்கம் செட்டியார்  மற்றும் கண.முத்தையா செட்டியார், சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார், கல்வி கொடை வள்ளல் ராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டியார், யாழ்ப்பாண வைத்தீஸ்வரர் ஆலயம் எழுப்பிய வைத்தியலிங்கம் செட்டியார், கல்விக்கொடை வழங்கிய ராஜா அண்ணாமலை செட்டியார், கல்வி வள்ளல் அழகப்ப செட்டியார், அவிநாசிலிங்க செட்டியார், தியாகராஜ செட்டியார்,  கவியரசு கண்ணதாசன், சீர்காழி கோவிந்தராஜன்  உள்ளிட்ட இச்சமுதாய   பெருமக்களின் அரசியல், பொருளாதார, கல்வி, சமுதாய கொடைகளையும், அவர்களது பங்களிப்பையும், எண்ணிப் பார்த்து பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். இவர்களால் இந்த சமுதாயம் உயர்வு பெற்றுள்ளது, ஏற்றம் பெற்றுள்ளது என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். 

தமிழர்கள், சங்க காலம் தொட்டே உள்நாட்டிலும், கடல் கடந்து வெளிநாடுகளிலும், குழுக்களாக வாணிபம் செய்து வந்துள்ளனர். நிகமம், மணிக்கிராமம், திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், நானாதேசிகள், வலஞ்சியர், சித்திரமேலி பெரியநாடு, அஞ்சு வண்ணம் போன்ற பல்வேறு வணிக குழுக்கள் பண்டை காலங்களில் இருந்ததை நாம் அறிய முடிகின்றது.   

சிலப்பதிகார தலைவன் கோவலன் தந்தை மாசாத்துவன் என்றும், கண்ணகியின் தந்தை மாநாயகன் என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.   சாத்து என்றால் தரைவழி வணிகக் குழு ஆகும்.  அதுபோன்றே, நாவிகர் என்றால் கப்பலை உடையவர் என்று பெயர். எனவே, பெரிய கடல் வணிகருக்கு மாநாவிகர் என்று பெயர்.  இது மருவி  மாநாயகன் ஆகியது  என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள்.  

பண்டைய காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் கடல் வணிகம் மூலம் அயல்நாட்டினருடன் நல்லுறவு கொண்டு இருந்தனர். அதே நேரத்தில், கடல் வணிகம் கட்டுப்படுத்தப்பட்ட பொழுது, அந்நாடுகளுக்கு படையெடுத்துச் சென்று நிலைமையை சீர் செய்துள்ளனர் என்பதையும் அறிய முடிகின்றது.   

அம்மாவின் அரசு, சாலையோர சிறு வியாபாரம் செய்வோர் முதல் மிகப்பெரிய வணிகர்கள் வரை, அனைவருக்கும் ஒரு பாதுகாப்பு அரணாக விளங்கி வருகின்றது.  அனைவரும் நிம்மதியாக தொழில் செய்யும் நிலையை அம்மாவின் அரசால் மட்டுமே தமிழ்நாட்டில் உருவாக்கித் தர முடியும் என்பதை நீங்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் உணர்கின்றனர்.  

வியாபாரத்திற்கு, விவசாயம் மற்றும் தொழில் உற்பத்தி மிகவும் இன்றியமையாதது. விவசாயத்திற்கும், தொழிலுக்கும்  அம்மாவின் அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து பெரும் புரட்சி கண்டு வருகிறது.  விவசாயத்திற்கு நீர் அவசியம் என்பதாலேயே நீர் மேலாண்மையில் அம்மாவின் அரசு அதிக கவனம் செலுத்தி, இன்று தமிழ்நாட்டை நீர் மிகை மாநிலமாக உருவாக்கி உள்ளது. 

இந்த கொரோனா காலத்தில் கூட அதிக அளவு தொழில் முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாட்டிற்கு அம்மாவின் அரசு பெருமை சேர்த்துள்ளது. தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு உள்ளிட்ட மொழிச் சிறுபான்மையினரின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட அம்மாவின் அரசு, தமிழ்நாடு மொழிவழி சிறுபான்மையினர் சமூக, பொருளாதார மேம்பாட்டு ஆணையத்தினை உருவாக்கி உள்ளது. 

அம்மா சமூக நீதி காத்த வீராங்கணை வழியில் அம்மாவின் அரசு, அனைத்து சமுதாய மக்களுக்கும் உரிய விகிதாச்சார வளர்ச்சி கிடைக்க வேண்டும் என்பதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க, நடவடிக்கை எடுத்து வருகிறது.   அம்மாவின் அரசு, என்றென்றும்  பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலனில் மிகவும் அக்கறையுடன் செயல்பட்டு, அவர்களை காப்பதில் என்றென்றும் முன்னோடியாக விளங்குகின்றது. 

கல்விக் கொடை, சமயக் கொடை மற்றும் பல்வேறு அறச்செயல் மூலம் இன்று உலகமெங்கும் தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும் பரவியதற்கு பெரும் பங்கு வகித்த இச்சமுதாய மக்களுக்கு, தமிழ்நாடு என்றென்றும் நன்றிக் கடன்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த சமுதாய மக்கள் பொதுமக்களிடம் நேரடியாக தொடர்பில் உள்ளவர்கள். சிறுவயதில் எனது ஊருக்கு அருகில் உள்ள கோனேரிப்பட்டியில் தான் பொருட்கள் வாங்க செட்டியார் கடைக்கு சென்று வாங்குவோம். ஏனென்றால் அவர்களிடம் பொருள் நன்றாகவும், தரமாகவும் இருக்கும் என்று பொதுமக்களால் நம்பக்கூடியவர்கள்.

தமிழகம் முழுவதும் பரவி இருக்கின்ற சமுதாயம் செட்டியார் சமுதாயம். அனைத்து பகுதிகளிலும் வாணிபம் செய்து வருகின்றனர். இந்தப்பகுதியில் எந்த அரசியல் கட்சிக்கு செல்வாக்கு இருக்கின்றது என்று கேட்டால் அவர்கள் தான் சொல்லுவார்கள். மக்களுடைய மனநிலையை நன்கு புரிந்தவர்கள் இந்த சமுதாய மக்கள். அ.தி.மு.க.வுக்கு பக்க பலமாக இருந்து வருகிறார்கள். அதற்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து