முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு மசோதா: கவர்னர் பன்வாரிலால் ஒப்புதல்

ஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளார். சீர்மரபினருக்கு 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கவும் கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி, பா.ம.க. மற்றும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமைப்பினர், பலகட்டப் போராட்டங்களை நடத்தி வந்தனர். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இக்கோரிக்கை குறித்து தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில்,தமிழக சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், கடந்த 26-ம் தேதி  வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதம், மிக பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினருக்கு 20 சதவீதம், பட்டியலினத்தவருக்கு 18 சதவீதம்,  பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் என மொத்தம் 69 சதவீதம் இடஒதுக்கீடு முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், மிக பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், எம்.பி.சி.-வி என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டு, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள சீர்மரபினருக்கு 7 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. 20 சதவீத இடஒதுக்கீட்டில் மீதம் உள்ள 2.5 சதவீதம் மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள மற்ற சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீடு ஆகும்.

தமிழகத்தில் சாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் தமிழக அரசு ஆணையம் அமைத்துள்ளது. அதன் அறிக்கை இன்னும் வெளியாகாத நிலையில், இந்த இடஒதுக்கீடு தற்காலிகமானது எனவும், 6 மாதத்திற்கு பின்னர் சாதிவாரியான புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு மாற்றியமைக்கப்படும் எனவும், சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

இந்நிலையில், சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்குத் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார். சீர்மரபினருக்கு 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கவும் கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து