முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்

ஞாயிற்றுக்கிழமை, 14 மார்ச் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நலக் குறைவால் நேற்று காலை 10.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 61.

சென்னையில் வசித்து வந்த அவர், தனது வீட்டில் சுயநினைவின்றி இருந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவர் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டிருந்தார். வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு அகிய திரைப்படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். ஜெயம் ரவி நடிப்பில் உருவான ‘பூலோகம்’ திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். மேலும், விஜய்சேதுபதி –ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ‘லாடம்’ திரைப்படத்தை இப்போது இயக்கி வந்தார். படப்பிடிப்பு முழுவதும் முடிந்து அத்திரைப்படத்திற்கு பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

எஸ்.பி.ஜனநாதன் அறிமுகமான இயற்கை திரைப்படம் தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. பிரபல டைரக்டர்கள் லெனின் பரதனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். கம்யூனிச சித்தாந்தத்தில் தனி ஆர்வம் கொண்டவர். அதனாலேயே தன் படங்களில் கம்யூனிச சித்தாந்தங்களை வசனம் மூலம் ரசிகரிடம் கொண்டு சேர்த்தார்.

மருத்துவத்துறையில் நடக்கும் மோசடியை தோலுரித்து ‘ஈ’ படம் எடுத்தார். இட ஒதுக்கீடு குறித்து தவறான கருத்துக்களைத் தவிர்க்கும் வகையில் பேராண்மை படம் எடுத்தார். மரண தண்டனை குறித்து எடுத்த பொதுவுடமைப் படம் ‘புறம்போக்கு’. தஞ்சை மாவட்டம் வடசேரியைச் சேர்ந்தவர் ஜனநாதன். திருமணம் செய்து கொள்ளவில்லை. படத் தயாரிப்பாளர் அழகன் தமிழ் மணியின் சகோதரர்.

எஸ்.பி.ஜனநாதனின் மறைவுக்கு படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்–நடிகைகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து