முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்தில் வன்முறை - 5 பேர் பலி

சனிக்கிழமை, 27 மார்ச் 2021      உலகம்
Image Unavailable

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வங்கதேசப் பயணத்துக்கு எதிராக, வெள்ளியன்று, நடந்த போராட்டங்களின் போது குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வங்கதேச விடுதலைப் போரின் 50-வது ஆண்டு விழா மற்றும் 'வங்கதேசத்தின் தந்தை' என்று அழைக்கப்படும் அந்த நாட்டின் முதல் அதிபர் ஷேக் முஜிபுர் ரகுமானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி டாக்கா சென்றடைந்தார்.

அவரது வருகையை வங்கதேசத்தில் உள்ள இஸ்லாமிய மற்றும் இடதுசாரி அமைப்புகள் கடந்த சில நாட்களாகவே எதிர்த்து வருகின்றன என்று பி.பி.சி. வங்காள மொழி சேவை தெரிவிக்கிறது. 

நரேந்திர மோதி வருகையை எதிர்த்து நடந்த போராட்டங்களின் போது வங்கதேச தலைநகர் டாக்கா, சிட்டகாங், பிரம்மன்பாரியா உள்ளிட்ட நகரங்களில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. கூட்டத்தைக் கலைக்க காவல் துறை ரப்பர் குண்டு தாக்குதலும் நடத்தினர்.

சிட்டகாங் நகரில் காவல்துறையினர் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே நடந்த மோதலின்போது காயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

நரேந்திர மோடிக்கு எதிராக ஹிஃபாஸத் - இ- இஸ்லாம் எனும் அமைப்பு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்திய இஸ்லாமியர்கள் நடத்தப்படும் விதம் குறித்து அந்த அமைப்பு நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

நரேந்திர மோடி மத ரீதியாக பாரபட்சம் காட்டுவதாக போராடும் அமைப்புகள் விமர்சிப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தலைநகரம் டாக்கா மற்றும் சிட்டகாங் நகரில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு நரேந்திர மோடி வருகைக்கு எதிராக பேரணிகளும் போராட்டங்களும் நடைபெற்றன.

அப்போது சிட்டகாங் நகரில், காவல்துறையினருடன் நடந்த மோதல் மற்றும் காவல் துறையின் ரப்பர் குண்டு தாக்குதல் ஆகியவற்றில் பலர் காயமடைந்தனர். அவர்கள் சிட்டகாங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

காயங்களுடன் தங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டவர்களில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக அந்த மருத்துவமனையைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ஹிஃபாஸத் - இ- இஸ்லாம் எனும் அமைப்பின் தலைவர் முஜிபுர் ரகுமான் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிரிழந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். 

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அவர் கூறுகிறார். ஆனால் இதை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த இயலவில்லை. 

பிரம்மன்பாரியா எனும் இடத்தில் உள்ள மதரஸாவில் படிக்கும் மாணவர்கள் நரேந்திர மோடி வருகைக்கு எதிரான பேரணி ஒன்றை வெள்ளியன்று நடத்தினர். அவர்களுடன் இன்னொரு மதரஸாவைச் சேர்ந்த மாணவர்களும் பின்னர் இணைந்து கொண்டனர்.

அப்போது ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சிட்டகாங்கில் உயிரிழந்த செய்தியைக் கேட்டதும் அவர்கள் கோபமடைந்து பொது இடங்களை தாக்கத் தொடங்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பிரம்மன்பாரியா ரயில் நிலையத்திற்கும் நகரின் பிற இடங்களுக்கும் தீ வைக்கத் தொடங்கினார்கள். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது என்று எகுஷே அலோ எனும் உள்ளூர் செய்தித்தாளின் ஆசிரியர் சலீம் பர்வேஸ் பிபிசி வங்காள மொழி சேவையிடம் தெரிவித்தார். 

இந்தச் சம்பவங்களின் போது காவல்துறையினர் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அப்போது மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானதாகவும் அவர் தெரிவிக்கிறார். ஆனால் இது தொடர்பாக காவல்துறை இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து