முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு நல்க வேண்டும்: தமிழக மக்களுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். வேண்டுகோள்

சனிக்கிழமை, 3 ஏப்ரல் 2021      அரசியல்
Image Unavailable

அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றும் அரசாக அ.தி.மு.க. அரசு தொடர்ந்து செயல்பட தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு உங்களின் பேராதரவினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

அ.தி.மு.க. ஒருங்கிணப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும் ,முதல்வருமான  எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சாதாரண தொண்டர்களாக இருந்த எங்களை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நிலைகளில் பல பொறுப்புகளை எங்களுக்கு வழங்கி, அளிக்கப்பட்ட வாய்ப்பின் அடிப்படையில் நாங்கள் படிப்படியாக உயர்ந்து இன்று தமிழ் நாட்டின் முதல்வர், துணை முதல்வர் என்ற நிலைக்கு வளர்ந்துள்ளோம். தொண்டர்களின் கஷ்டங்களை நாங்கள் நன்கு அறிவோம். அதனால் தான், இன்றும் தொண்டர்களோடு தொண்டர்களாக இருந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம்.  கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அரசு அறிவித்த மக்கள் நலத் திட்டங்களினால், அனைத்துத் தரப்பு மக்களின் பேராதரவையும், நன்மதிப்பையும் பெற்றுள்ளோம் என்பதை நாங்கள் உணர்கிறோம். எங்களுக்குக் கிடைத்த இந்த நல்வாய்ப்பினை சிறிதும் குறைவின்றி, எங்களது கடமையை நிறைவேற்றி இருக்கிறோம்.  ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, தி.மு.க.வின் தூண்டுதலின் பேரில் எண்ணற்ற போராட்டங்கள், பல்வேறு அமைப்புகள் மூலம் நடைபெற்றது. அந்தப் போராட்டங்களை எல்லாம் சமாதானமான முறையில் பேசி, அதற்கு தீர்வு கண்டு, வெற்றிகண்டுள்ளது அரசு.

தி.மு.க.வில் தொடர்ந்து குடும்ப அரசியல், வாரிசு அரசியல் தான் நடந்து வருகிறது. ஆனால், அ.தி.மு.க.வில் அதுபோன்ற நிலை இல்லை. கட்சிக்கு உண்மையாகவும், விசுவாசமாகவும் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும், கட்சியிலும், ஆட்சியிலும் பொறுப்புக்கும் பதவிக்கும் வரமுடியும். ஆனால் இது போன்ற நிலை தி.மு.க-வில் இல்லை. தி.மு.க. ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், நில அபகரிப்பு நடக்கும்; அராஜக ஆட்சி துவங்கும். குடும்ப ஆட்சி தலைதூக்கும். தமிழகம் அமளிக்காடாகத் திகழும்.  கட்டப் பஞ்சாயத்து செய்யும் நிலை ஏற்படும்.  பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. நிர்வாகச் சீர்கேடு ஏற்படும்.  அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து காணப்படும்.  எனவே, தமிழ் நாட்டு மக்கள் அமைதியான, ஜாதிக் கலவரம் இல்லாத, அனைத்து சமுதாய மக்களும், நிம்மதியுடனும் வளமான வாழ்வு வாழ, வழி செய்யும் வகையில் 2021 ஏப்ரல் மாதம் நடைபெறுகின்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி, அ.தி.மு.க சார்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியும் என்பதை கருத்தில் கொண்டு தான் தேர்தல் வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது.  எனவே, தேர்தல் நேரத்தில், மக்களுக்கு அளிக்கின்ற அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றும் அரசாக அ.தி.மு.க. அரசு தொடர்ந்து செயல்படும் என்பதால், வருகின்ற 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு உங்களின் பேராதரவினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து