முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் - புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: இனி யூ டியூப், சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்யக் கூடாது

ஞாயிற்றுக்கிழமை, 4 ஏப்ரல் 2021      அரசியல்
Image Unavailable

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று இரவு 7 மணியுடன் முடிவுக்கு வந்தது. இரவு 7 மணியுடன் பிரச்சாரம் முடிவதை கருத்தில் கொண்டு பெரும்பாலான வேட்பாளர்கள் அதிகாலையிலேயே வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட தொடங்கி விட்டனர். இனி யூ டியூப், சமூக வலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு வழியாக நேற்று இரவு 7 மணியுடன் பிரச்சாரம் முடிவுக்கு வந்த நிலையில் புதுவையிலும் பிரச்சாரம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நாளை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி மே மாதம் 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. 

தமிழகத்தில் தற்போதுள்ள அ.தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதேபோல், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடையும் தருவாயில் உள்ளன.  இந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி (நாளை) தேர்தல் நடைபெற இருக்கிறது. 

தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் மாதம் 12-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி நிறைவடைந்தது. மார்ச் 20-ம் தேதி வேட்புமனுகள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், வேட்புமனு திரும்பப்பெறும் கடைசி நாளான 22-ம் தேதி மாலை வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 3 ஆயிரத்து 998 பேர் போட்டியிடுகின்றனர். இதில், 3 ஆயிரத்து 585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேரும் அடங்குவர். வேட்புமனு தாக்கல் தொடங்கிய நாளில் இருந்தே, தேர்தல் பிரச்சாரமும் சூடுபிடிக்கத் தொடங்கியது. 

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.  இதற்கிடையே, பிரதமர் நரேந்திரமோடி, அகில இந்திய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் தமிழகத்திற்கு வந்து பிரசாரம் மேற்கொண்டு, தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டினர். 

இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியுடன் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் பிரச்சாரம் ஓய்ந்தது.  இரவு 7 மணிக்கு முன்னதாக, பிரச்சாரத்திற்காக வந்தவர்கள் தொகுதியை விட்டு வெளியேறி விடவேண்டும். இனி கருத்து கணிப்புகளும் வெளியிட முடியாது. டாஸ்மாக் மதுக்கடைகளும் நேற்று முதல் 3 நாட்கள் மூடப்படுகின்றன. 

தமிழகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்காக, மொத்தம் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் தயார் படுத்தப்படுகின்றன. வாக்குப்பதிவுக்காக ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 102 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இவற்றுடன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 205 கட்டுப்பாட்டு எந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் வி.வி.பேட் கருவி ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 807 எந்திரங்களும் இணைக்கப்பட உள்ளது. 

இந்த நிலையில், வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்ற நிலையில், தற்போது அந்தப் பணிகள் நிறைவடைந்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை முதல் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களும், அழியாத அடையாள மை உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பொருட்கள் அனுப்பும் பணிகளும் தொடங்க இருக்கிறது.  தேர்தல் பாதுகாப்பு பணியில் 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பணியில் 4 லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். வாக்குப்பதிவு நாளை  இரவு 7 மணிக்கு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பெட்டிகளில் வைத்து சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட இருக்கின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே மாதம் 2-ம் தேதி காலை, இந்த பெட்டிகளில் உள்ள சீல் உடைக்கப்பட்டு, வாக்குகள் எண்ணப்படும். அன்று காலை 11 மணி முதலே முன்னணி நிலவரங்கள் தெரியவரும். மாலைக்குள் ஆட்சி அமைப்பது யார்? என்பதும் தெரிந்து விடும். பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, சொந்தத் தொகுதியான எடப்பாடியிலும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளிலும், சொந்தத் தொகுதியான கொளத்தூரிலும் பிரச்சாரம் மேற்கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து