முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை கோவிலில் நடை திறப்பு: இன்று முதல் தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2021      ஆன்மிகம்
Image Unavailable

விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மார்ச் 14-ம் தேதி திறக்கப்பட்டது. 19-ம் தேதி பங்குனி ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் விழா மிக கோலாகலமாக நடந்து, 28-ம் தேதி ஆராட்டுடன் விழா நிறைவடைந்தது. அன்று இரவு நடை சாத்தப்பட்டது. 

இந்த நிலையில், விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று  திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். 

இன்று வழக்கம் போல் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, கலசாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. வரும் 14-ம் தேதி விஷூ பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் கனி காணுதல் நடைபெறும். தொடர்ந்து 18-ம் தேதி வரை சித்திரை மாத சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும். 

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சபரிமலையில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. சபரிமலை வெர்சுவல் க்யூவில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.  இதனையடுத்து இன்று 11-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து பக்தர்களுக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பாசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நெகட்டிவ் மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களுடன் வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ரயில்கள் மூலம் வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கோட்டயம், திருவல்லா, செங்கன்னூர், கொல்லம், கொட்டாரக்கரை, புனலூர் ஆகிய இடங்களில் இருந்து கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் சிறப்பு பஸ்கள் நிலக்கல் வரை இயக்கப்படும். பத்தனம்திட்டையில் இருந்து பக்தர்களின் தேவைக்கு ஏற்றவாறு பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து