முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா கட்டுப்பாடுகளுடன் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு துவங்கியது: ஆய்வகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. மொத்தம் 28 வகையான பாடங்களுக்கு இந்த செய்முறை தேர்வு நடைபெறுகிறது. உரிய வழிகாட்டு நெறிமுறைகள் படி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நேற்று முதல் வரும் 23-ம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெறுகிறது.

பாட வாரியாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆய்வகங்களில் மாணவர்களுக்கு தனித்தனி இட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகே ஆய்வகங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர். 

அதே போல் செய்முறை தேர்வுகள் முடிந்ததும் ஆய்வக பொருட்களை சுத்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  பள்ளி வளாகங்களையும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

செய்முறை தேர்வுகள் அனைத்தையும் வருகிற 23-ம் தேதிக்குள் நடத்தி முடித்து 24-ம் தேதிக்குள் மதிப்பெண்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில் பாதுகாப்பான முறையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது என்று பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

சென்னை அசோக் நகர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற செய்முறை தேர்வுகளை பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் நேரில் சென்று ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள 7 ஆயிரம் பள்ளிகளில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு சுமூகமாக நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக நான்கு குழுக்களாக மாணவர்களை பிரித்து தேர்வு நடத்தப்படுகிறது. எளிதான தேர்வுகள் மட்டுமே நடத்தப்படுகின்றன.

செய்முறைத் தேர்வை சுமார் 2 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.  கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ள மாணவர்களுக்கு வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி பாதுகாப்புடன் தேர்வு நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து