OPS-2021-02-22

Source: provided

சென்னை : மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

 நடிகர் விவேக் நேற்று காலை சினிமா பட்டபிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது  அவருக்கு திடீர் என மாரடைப்பு  ஏற்பட்டது  உடனடியாக அவர் தனியார்  மருத்துவமனை ஒன்றில்  அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விவேக் தற்போது நலமுடன் உள்ளதாக மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தகவல் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் நேற்று முன்தினம்தான் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது.  தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னரும் முக கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள் எனத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் நடிகர் விவேக் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.  

இந்த நிலையில் விவேக்கின் உடல்நிலை குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் விசாரித்து உள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டது பற்றி கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன் விவேக். என்னுடைய பிரார்த்தனைகளும் வாழ்த்துகளுக்கும் உங்களுக்கு உண்டு. சிம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர்களிடம் பேசினேன். சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் தொடர்பில் உள்ளேன். விரைவில் நலம்பெற வேண்டும் விவேக் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து