முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளச்சேரியில் இன்று மறுவாக்குப்பதிவு: இடதுகை நடுவிரலில் மை வைக்கப்படும்

வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வேளச்சேரியில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 92-வது எண் வாக்குச்சாவடி ஆண் வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடி என்பதால், ஆண் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவின் போது வாக்களிக்கும் நபர்களின் இடது கை நடுவிரலில் அழியா மை வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடந்தது. அன்று மாலை சென்னை வேளச்சேரி தொகுதியில் உள்ள 92-வது எண் வாக்குச்சாவடியில் இருந்து 2 மின்னணு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரம் ஆகியவற்றை விதியை மீறி இருசக்கர வாகனத்தில் தேர்தல் பணியாளர்கள் எடுத்துச் சென்றதால் சர்ச்சை உருவானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப் பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிக்கை அனுப்பி வைத்தார். குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில், வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 92-வது எண் வாக்குச் சாவடியில் வரும் 17-ம் தேதி காலை 7 முதல் இரவு 7 மணி வரை மறுவாக்குப்பதிவு நடத்தவும், இதுகுறித்து அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் விளம்பரம் செய்யவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில் வேளச்சேரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட டி.ஏ.வி. பப்ளிக் பள்ளி, சீதாராம் நகர், வேளச்சேரி, சென்னை - 42 என்ற முகவரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 92-ல் மறுவாக்குப்பதிவு இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்தப்படுகிறது.  மேலும், இவ்வாக்குச்சாவடியானது ஆண் வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடி என்பதால், இந்த மறுவாக்குப்பதிவை மேற்படி வாக்குச்சாவடி எண்.92-க்குட்பட்ட 548 ஆண் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வாக்குப்பதிவின் போது வாக்களிக்கும் நபர்களின் இடது கை நடுவிரலில் அழியா மை வைக்கப்படும் எனவும், இந்தக் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் 80 வயதுக்கு மேற்பட்ட வயது முதிர்ந்த வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோரில் ஏற்கெனவே தபால் ஓட்டு அளித்தவர்களும், அளிக்க இருப்பவர்களும் நேரில் சென்று வாக்களிக்க இயலாது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து