முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் 53 பேருடன் சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயம்

வியாழக்கிழமை, 22 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

இந்தோனேசியாவில் 53 பேருடன் சென்ற கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் மாயமாகியுள்ளது.

இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான கே.ஆர்.ஐ. நங்கலா-402 ரக நீர்மூழ்கி கப்பல் அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பாலி தீவு அருகே ஜாவா கடலில் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அந்த நீர்மூழ்கி கப்பலில் இந்தோனேசிய கடற்படையினர், மாலுமிகள் உள்பட மொத்தம் 53 பேர் பயணித்தனர்.  

நீர்மூழ்கி கப்பல் நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணியளவில் பாலி தீவு பகுதியில் உள்ள கடற்பரப்பில் 95 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.  உடனடியாக, நீர்மூழ்கி கப்பலை தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து மீண்டும் முயற்சித்த போதும் அந்த முயற்சி தோல்வியடைந்தது. 

இதையடுத்து, இந்தோனேசிய கடற்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக செயல்பட்ட கடற்படையினர் நீர்மூழ்கி கப்பல் கடைசியாக கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்த கடற்பரப்பில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.  பாலி தீவில் உள்ள கடற்பரப்பில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக இந்தோனேசிய ராணுவ தளபதி ஹடின் டிஜஹ்ஜண்டொ தெரிவித்துள்ளார்.

1,395 டன் எடைகொண்ட மாயமான கே.ஆர்.ஐ. நங்கலா-402 ரக நீர்மூழ்கி கப்பல் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது. மேலும், மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இந்தோனேசியா உதவி கோரியுள்ளது.  இதையடுத்து, மாயமான இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பலை தேடுதல் பணிக்காக இந்திய கடற்படைக்கு சொந்தமான ஆழ்கடல் நீர்மூழ்கி மீட்பு கப்பல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பல் மாயமாகி 24 மணி நேரத்திற்கும் மேலாகியுள்ளதால் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த 53 பேரின் நிலை என்ன ஆனது என்பது குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து