கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அப்போது பக்தர்கள் அரசு வழிகாட்டுதல்படி சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அழகர் கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சைவ-வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்த விழாவை பக்தர்கள் கொண்டாடி வருகிறார்கள்.  கடந்த ஆண்டு கொரோனாவால் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு, முக்கிய நிகழ்ச்சிகள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதியின்றி கோவிலுக்குள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டும் கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கோவிலுக்குள் நடந்து வருகிறது.  அதே நேரத்தில் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா எவ்வாறு நடத்தப்படும்? என்பது பற்றிய விவரம் வெளியிடப்படாமல் இருந்தது. மேலும் இந்த ஆண்டு கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை நடத்த மதுரை ஐகோர்ட்டு அனுமதி மறுத்து விட்டது. இதையொட்டி கோவில் நிர்வாகத்தினர், திருவிழாவை எவ்வாறு நடத்தலாம்? என ஆலோசனை நடத்தினர். இதைதொடர்ந்து, இந்த வருடமும் கோவில் வளாகத்திலேயே சித்திரை திருவிழாவை ஆகமவிதிப்படி நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.15 மணிக்கு தொடங்குகிறது. வெளி பிரகாரத்தில் கள்ளழகர் பெருமாள் பல்லக்கில் ஆடிவீதி வழியாக பவனி வந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வார். அப்போது பக்தர்கள் அரசு வழிகாட்டுதல்படி சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.  24, 25-ம் தேதிகளில் கோவில் வளாகத்திலேயே வழக்கமான திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும். 26-ம் தேதி காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் எதிர்சேவை நிகழ்வு, கள்ளழகர் திருக்கோலம் நடைபெறும். 27-ம் தேதி காலை 8 மணிக்கு குதிரை வாகனம், ஆண்டாள் மாலை சாற்றி கள்ளழகர் எழுந்தருள்கிறார். பின்னர் காலை 8.30 மணிக்கு குதிரை வாகனத்திலேயே ஆடி வீதியில் வலம் வருகிறார்.  28-ம் தேதி காலை 7 மணிக்கு சைத்திய உபசாரம் சேவையும், காலை 10.30 மணிக்கு சேஷ வாகன புறப்பாடும் நடைபெறும். 29-ம் தேதி காலை 10 மணிக்கு கருட சேவை, புராணம் வாசித்தல், மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தலும் நடைபெறும். 30-ம் தேதி காலை 10 மணிக்கு புஷ்ப பல்லக்கும், மே 1-ம் தேதி அர்த்த மண்டபத்தில் சேவையும், 2-ம்  தேதி காலை 10 மணிக்கு உற்சவ சாந்தி, திருமஞ்சனமும் நடைபெறும்.  விழா நாட்களில் 30-ம் தேதி வரை, காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை திருக்கல்யாண மண்டபத்தில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக வழிகாட்டுதல்படி கலந்து கொண்டு கள்ளழகர் பெருமாளை தரிசனம் செய்யலாம்.  

மேலும் திருவிழாவின் போது கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சுவதும், திரி எடுத்தலுக்கும், அர்ச்சனை, மாலை சாற்றுதலுக்கு இந்த வருடமும் அனுமதி கிடையாது. மேலும் திருவிழா நிகழ்ச்சிகளை கோவில் தேரோடும் வீதிகள், கோவில் பஸ் நிலையம், தல்லாகுளம் வெங்கடாசலபதி கோவில் பகுதி, வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவில் பகுதிகளில் அகண்ட திரை மூலம் பக்தர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து