முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் பக்தர்களின்றி எளிமையாக நடந்த மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாண வைபவம் - இணையதளம் மூலம் கண்டு மகிழ்ந்தனர்

சனிக்கிழமை, 24 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை மீனாட்சிஅம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இதனை இணையதளம் மூலம் பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, கொரோனா பரவல் காரணமாக உள் திருவிழாவாக நடந்து வருகிறது. விழாவின் 8-ம் நாளன்று மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடந்தது. 9-ம் நாளான நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன் சிவபெருமானை போருக்கு அழைத்ததை நினைவூட்டும் திக்கு விஜயம் நிகழ்ச்சி கோவில் ஆடி வீதியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

இதில் மீனாட்சி, சுந்தரேசுவரராக சிறுவர்கள் வேடமணிந்து, வில் வைத்து போர் புரிவது போன்று நடித்து காண்பித்தனர். இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கும், சுவாமிக்கும் கையில் வில் வைத்திருப்பது போன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.  எப்போதும் மீனாட்சி திருக்கல்யாணம் வடக்குமேல ஆடி வீதியில் உள்ள மண்டபத்தில் நடைபெறும்.

ஆனால் இந்த முறை பழைய திருக்கல்யாண மண்டபத்தில் இந்த வைபவம் நடைபெற்றது.  எனவே அங்குள்ள மண மேடை பல லட்ச ரூபாய் மதிப்பில் வெளிநாடு, வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் மற்றும் உள்ளூரில் இருந்து வரப்பெற்ற பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது. 

திருக்கல்யாண நிகழ்வுகளை காண பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டதால்  திருக்கல்யாண நிகழ்வுகள் அனைத்தும் கோவில் இணையதளம் மூலம் பக்தர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டு  இருந்தது.

அதன் மூலம் பக்தர்கள் கண்டு  மகிழ்ந்தனர்.  ஆனால் 10 மணிக்கு மேல் 12.30 மணி வரை மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த கோவிலை சுற்றிலும் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டு இருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து