முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்: எஸ்.வி.சேகர்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று 2-வது தவணை கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர் நடிகர் எஸ்.வி.சேகர் வேண்டுகோள் விடுத்தார். 

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை வேகமெடுத்து வருகிறது. கொரோனா தொற்று சங்கிலியை உடைத்தெறிய பொதுமக்கள், தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நடிகர் எஸ்.வி.சேகர், அவருடைய மனைவி உமா மகேஸ்வரி, தாய் அலமேலு மற்றும் குடும்பத்தினருடன் 2-வது தவணை கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.  இதே போல நடிகை ஜெயமாலினியும் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதன் பிறகு நடிகர் எஸ்.வி. சேகர், வெளியிட்ட வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது:-

என்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து கோவிஷீல்டு 2-வது தவைண தடுப்பூசி நான் போட்டுக் கொண்டேன். நம்முடைய தேக ஆரோக்கியத்துக்காகவும், நம்மை சுற்றி இருப்பவர்களின் நலனுக்காகவும் கோவிஷீல்டோ அல்லது கோவேக்சின் தடுப்பூசியோ நாம் போடவேண்டியது அவசியமான ஒன்று.  வீணான வதந்திகளை நம்ப வேண்டாம். நான் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி ஒரு மாதம் ஆகிறது. பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை.

ஊசி குத்தும் போது வலிப்பதை தவிர வேறு எதுவும் இல்லை. முக்கியமான விஷயங்களை டாக்டர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.  தடுப்பூசி செலுத்திய பின்னர் 10 நாட்களுக்கு மது அருந்தக் கூடாது என்று சில டாக்டர்கள் சொல்கிறார்கள். 72 மணி நேரம் அசைவ உணவு சாப்பிடக் கூடாது என்றும் சொல்கிறார்கள். எந்த மருந்து சாப்பிடலாம்? எந்த மருந்து சாப்பிடக்கூடாது? என்பதை டாக்டர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொண்டு ஊசி போட்டுக் கொள்ளுங்கள். 

அதை விட்டுவிட்டு, பயத்தில் தடுப்பூசி போட மாட்டேன் என்று சொல்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. 130 கோடி பேர் இருக்கும் தேசத்தில், நாம் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டால், கொரோனாவை நாம் ஜெயிக்க முடியும். மறந்து விடாதீர்கள், கண்டிப்பாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.  இவ்வாறு அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து