முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகத்தில் மே 11- வரை 14 நாட்கள் முழு ஊரடங்கு: எடியூரப்பா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 27 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

அசுரவேக கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் நேற்று இரவு (செவ்வாய்க் கிழமை) முதல் மே மாதம் 11-ம் தேதி வரை 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மந்திரி சபை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கொரோனா 2-வது அலை பரவல் நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது.  நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் இந்த கொரோனா பரவலை தடுக்க பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கையும், சில மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கையும் அறிவித்துள்ளன. கர்நாடகத்தில் வைரஸ் தொற்று பரவல் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

இந்தியாவிலேயே பெருநகரங்களில் பெங்களூருவில் தான் வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில் கர்நாடக அரசு கடந்த 10-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கை அறிவித்தது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  அதைத் தொடர்ந்து கவர்னர் வஜூபாய் வாலா கடந்த 20-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினார். இதில் கொரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 21-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணிக்கு தொடங்கி காலை 6 மணி வரை அமல்படுத்தப்பட்டது. அத்துடன் வார இறுதி நாட்கள் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. அதன்படி கடந்த 24, 25-ம் தேதி கர்நாடகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே முடிவு செய்தபடி கர்நாடக அமைச்சரவை கூட்டம் முதல்வர்  எடியூரப்பா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் கொரோனா நிபுணர் குழுவினரும் பங்கேற்றனர். இதில் கர்நாடகத்தில் வேகமாக பரவும் கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகளை மேலும் தீவிரமாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

இதில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க வேண்டுமென்றால் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியே தீர வேண்டும் என்று பிடிவாதமாக கூறினார். மருத்துவ நிபுணர் குழுவும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறியது. இதையடுத்து கர்நாடகத்தில் முழு ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கர்நாடகத்தில் (நேற்று)இரவு 9 மணி முதல் மே மாதம் 11-ம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகளை (முழு ஊரடங்கை) அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்த கட்டுப்பாடுகள் 14 நாட்கள் அமலில் இருக்கும். இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள், பால், இறைச்சி விற்பனை கடைகளுக்கு அனுமதி உண்டு. இந்த கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும். அதன் பிறகு கடைகளை மூடிவிட வேண்டும்.  ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் (கார்மெண்ட்ஸ்) தவிர உற்பத்தித்துறை, விவசாய உற்பத்தி நிறுவனங்கள், மருத்துவ உற்பத்தி நிறுவனங்கள், கட்டுமான பணிகள் செயல்படலாம். இந்த கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட கலெக்டர்கள், தாசில்தார்கள் தீவிரமாக அமல்படுத்தி கொரோனா பரவலை தடுக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருகிற 1-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்படுகிறது. தகுதியானவர்கள் தங்களின் பெயரை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும்.  இந்த கொரோனா தடுப்பூசி இலவசமாக வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு சுகாதாரத்துறை தனியாக வழிகாட்டுதலை வெளியிட உள்ளது. கர்நாடகத்தில் இனி ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை. ஏனென்றால் மத்திய அரசு தினசரி ஆக்சிஜன் வினியோகத்தை 300 டன்னில் இருந்து 800 டன்னாக உயர்த்தியுள்ளது.

பஸ் போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது. மெட்ரோ ரெயில்களும் ஓடாது. தனியார் வாகன போக்குவரத்துக்கும் அனுமதி இல்லை. அரசு அனுமதி வழங்கியுள்ள நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் அடையாள அட்டைகளை காட்டி பணிக்கு செல்லலாம். டாக்டர்கள் உள்பட மருத்துவ பணியாளர்கள் பணிக்கு சென்று வர எந்த தடையும் இல்லை. அரசு அறிவித்துள்ள இந்த ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 14 நாட்களுக்கு பிறகு நிலைமையை ஆராய்வோம். ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம். விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நகரங்களுக்கு கொண்டு வந்து காலை 10 மணிக்குள் விற்பனை செய்து கொள்ளலாம். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து