முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சியமைக்கும் தி.மு.க : தமிழக முதலமைச்சர் ஆகிறார் மு.க.ஸ்டாலின்

ஞாயிற்றுக்கிழமை, 2 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : 10 ஆண்டுகளுக்குப்பின் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைக்கிறது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகிறார். சட்டமன்ற கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோருவார். முதல்வராகும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு பல்வேறு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் கடந்த மாதம் 6-ம் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அந்ததேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவானது. 

இதையடுத்து நேற்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 8 மணிக்கு தமிழகம் முழுவதும் 75 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 9 மணி முதலே முன்னிலை நிலவரம் வெளியாக தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. 

தமிழகத்தில் 234 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. தி.மு.க கூட்டணி மொத்தம் 158 தொகுதிகளிலும், அ.தி.மு.க கூட்டணி மொத்தம் 76 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தது. தி.மு.க மட்டும் 125 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தன. அ.தி.மு.க. கூட்டணி 76 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. அ.தி.மு.க. 66 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகளான பா.ஜ.க 4 தொகுதிகளிலும், பா.ம.க 5 தொகுதிகளிலும் மற்ற கட்சி 1 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தன.

தி.மு.க மட்டும் மெஜாரிட்டிக்கு தேவையான 118 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று தமிழகத்தில் ஆட்சியமைப்பதை உறுதி செய்துள்ளது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிறார். 

10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி மலர்கிறது. 53 வருட அரசியல் பயணத்தை கடந்துள்ள மு.க.ஸ்டாலின் 2009-ல் துணை முதல்வராக பொறுப்பேற்றார். அதற்கு முன்பு அவர் அமைச்சராக, மேயராக பல பதவிகளை வகித்தார். தற்போது முதல் முறையாக முதல்வர் நாற்காலியை அலங்கரிக்க உள்ளார். அவருக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

இந்த தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் பா.ஜ.க, பா.ம.க, த.மா.கா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஏற்கனவே இக்கூட்டணியில் இருந்த தே.மு.தி.க இந்த முறை கூட்டணியில் இருந்து விலகி அ.ம.மு.கவுடன் இணைந்து போட்டியிட்டது. ஆனால் அந்தக் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.  விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விருத்தாசலத்தில் போட்டியிட்டார் ஆனால் அவரும் மண்ணை கவ்வினார். அ.தி.மு.க.வை எதிர்த்து சில தொகுதிகளில் களம் கண்ட அ.ம.மு.க.வும் இத்தேர்தலில் வெற்றி பெறவில்லை.கோவில்பட்டியில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரனும்  தோல்வியைத் தழுவினார். இந்தத்  தேர்தலில் 5 முனை போட்டி நிலவியது. விழுந்து விழுந்து பிரசாரம் செய்த நாம் தமிழர் கட்சியின் சீமான் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அவரும் தனது தொகுதியில் வெற்றி பெறவில்லை. ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை குஷ்புவும் வெற்றி பெறவில்லை. இருப்பினும் தமிழகத்தில் பா.ஜ.க. நான்கு இடங்களில் வெற்றி முகத்தில் உள்ளது. இந்த நான்கு இடங்களில் தாமரை மலர்ந்துள்ளது. இது கொரோனா காலம் என்பதால் வெற்றி கொண்டாட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அதனால் வேட்டுச்சத்தம் அதிகமாக கேட்கவில்லை. ஊர்வலமும் நடக்கவில்லை. அண்ணா அறிவாலயத்தில் மட்டும் தடையை மீறி சிலர் பட்டாசை வெடித்தனர். அவர்களை தடுக்க தவறிய ஒரு போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

இந்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. கருத்துக்கணிப்புகள் அந்தக் கட்சிக்கு சாதகமாக இருந்தன.  இந்நிலையில் மு.க.ஸ்டாலின் விரைவில் தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ளார். அவர் கொளத்தூர் தொகுதியிலும் அவரது மகன் உதயநிதி சேப்பாக்கம் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர். ஸ்டாலினுக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்தத் தேர்தலில் காங்கிரசும் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டது. ராசியில்லாத கட்சி என்று சொல்லப்பட்ட ம.தி.மு.கவும் 4 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இந்தத் தேர்தல் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருபெரும் தலைவர்கள் இல்லாதநிலையில் நடந்தது. இதன் காரணமாக பெரும் எதிர்பார்ப்பு தமிழகத்தில் நிலவியது. இறுதியில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து