AMMA 2021 05 04

Source: provided

சென்னை : சென்னையில் அம்மா உணவகம் தி.மு.க.வினரால் சூறையாடப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகி தி.மு.க. ஆட்சி அமையப் போகிறது என்ற செய்தி வந்த சில நாட்களிலேயே தி.மு.க.வினரின் வன்முறையும், அரசியல் அநாகரீகமும் தலைதூக்க ஆரம்பித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. உலகமே வியந்து நோக்கி எல்லா நாடுகளும் பின்பற்ற வேண்டிய கருணைமிகு திட்டம் என்று பாராட்டும் அம்மா உணவக திட்டத்தை அம்மா ஏற்படுத்தினார். 

சென்னை ஜெ.ஜெ. நகரில் உள்ள அம்மா உணவகம் மீது தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தி இருப்பது ஒரு போதும் ஏற்புடையது அல்ல. அம்மாவால் ஏழை, எளிய மக்களுக்காக கொண்டு வரப்பட்ட அற்புதமான திட்டம்தான் அம்மா உணவகம். அம்மாவின் சிந்தனையில் உதித்த மக்களுக்கான அம்மா உணவக திட்டத்தின் சிறப்பை உணர்ந்து இன்றளவும் அண்டை மாநிலங்கள் தொடங்கி அயல்நாடுகள் வரை இத்திட்டத்தை பின்பற்றி வருகின்றன. 

பெருமழை, பெருவெள்ளம் தொடங்கி கொரோனா பேரிடர் காலங்கள் வரை உணவின்றி தவித்தோரின் பசிப்பிணி நீக்கிய அட்சய பாத்திரமாம் அம்மா உணவகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கு ஒப்பாகும். அம்மாவினுடைய படத்தினை சேதப்படுத்தி உள்ளதும் வேதனை அளிக்கிறது. இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். புதிதாக ஆட்சி பொறுப்பேற்கும் மு.க. ஸ்டாலின், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை சீர்குலைப்போர் மீது உடனடியாக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து