முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு : கவர்னரை இன்று சந்தித்து உரிமை கோருகிறார்

செவ்வாய்க்கிழமை, 4 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று மாலை நடந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க. ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் கவர்னர் மாளிகை சென்று இன்று கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.  

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி நடந்தது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 158 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. தி.மு.க. மட்டுமே தனியாக 125 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தி.மு.க. தனி மெஜாரிட்டி பெற்றது. இதையடுத்து தி.மு.க. ஆட்சி அமைக்கிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக வரும் 7-ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 4-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார். அனைவரும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். அதன்படி நேற்று மாலை சென்னையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடியது. அப்போது மு.க. ஸ்டாலினுக்கு துரைமுருகன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோரும் சால்வை அணிவித்தனர். இக்கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 125 பேரும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவராக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கூட்டத்தில் கரவொலி எழுந்தது. 

இதையடுத்து மு.க. ஸ்டாலின் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை இன்று சந்திக்கிறார்.  அப்போது, தான் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையும், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் கவர்னரிடம் ஸ்டாலின் கொடுப்பார். மேலும் தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறும் மு.க. ஸ்டாலின் உரிமை கோருவார்.  

இந்த நிலையில் வரும் 7-ம் தேதி கவர்னர் மாளிகையில் மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்கிறார். வழக்கமாக பிரம்மாண்டமாக பதவியேற்பு விழா நடக்கும். ஆனால் இது கொரோனா காலம் என்பதால் கவர்னர் மாளிகையிலேயே இந்த பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. புதிய முதல்வராக பதவியேற்கும் ஸ்டாலினுக்கு ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம், ரஜினிகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

அதையடுத்து கே. வீரமணி, வைகோ போன்ற தலைவர்களும் நேரில் சந்தித்து ஸ்டாலினை வாழ்த்தினர். நேற்று மாலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனும் ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து கூறினார். மு.க. ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பதால் தி.மு.க. வட்டாரத்தில் மகிழ்ச்சி அலை பொங்கி வழிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து