முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். வீரர்கள் கொரோனாவால் எப்படி பாதிக்கப்பட்டார்கள் எனக் கூறுவது கடினம்: பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி கருத்து

வியாழக்கிழமை, 6 மே 2021      விளையாட்டு
Image Unavailable

ஐ.பி.எல். வீரர்கள் எப்படி கொரோனாவால்  பாதிக்கப்பட்டார்கள் எனக் கூறுவது கடினம் என்றும், ஐ.பி.எல் போட்டியை இந்தியாவில் நடத்த முயன்றது பிழையல்ல என்றும்  பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.

இந்தியாவில்... 

கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐ.பி.எல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய  6 நகரங்களில் ஐ.பி.எல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐ.பி.எல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. 

வீரர்களுக்கு பரவல்...

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஐ.பி.எல். அணிகளுக்குள் கொரோனா வைரஸ் ஊடுருவி தாக்கியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் ஆகியோர் முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி கொரோனாவில் சிக்கினார். 

ஐதராபாத் வீரர்...

இதனை தொடர்ந்து ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் விருத்திமான் சஹா, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ஆகியோருக்கும் அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு பரவியது. இதனால் அந்த அணியினர் தனிமைப்படுத்தப்பட்டதுடன் அந்த அணிகளின் ஆட்டங்களும் தள்ளிவைக்கப்பட்டன.

ஆட்டம் தள்ளிவைப்பு...

ஒரே நேரத்தில் 4 அணிகளை சேர்ந்தவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளானதால் ஐ.பி.எல். நிர்வாக கவுன்சில் இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் அவசரமாக கலந்து ஆலோசித்து இந்த சீசனுக்கான ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.

29 ஆட்டங்கள்...

கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐ.பி.எல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐ.பி.எல் போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன. ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன.

இங்கிலாந்து தொடர்...

இந்நிலையில் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கங்குலி கூறியதாவது:-

ஐ.பி.எல் போட்டியை இந்தியாவில் நடத்த முயன்றது பிழையல்ல. இந்த முடிவை எடுத்தபோது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தது. இங்கிலாந்து தொடரை வெற்றிகரமாக நடத்தினோம்.  ஐ.பி.எல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

கடினமானது...

ஆனால், பிப்ரவரியில் இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒன்றும் இல்லாமல் இருந்தது. கடந்த மூன்று வாரத்தில் மிகவும் உயர்ந்துவிட்டது. கொரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு யாரும் வெளியேறவில்லை. எனினும் பல வீரர்கள் எதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள் எனக் கூறுவது கடினமானது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து