முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் வசந்தோற்சவம் 25-ம் தேதி தொடங்குகிறது

செவ்வாய்க்கிழமை, 11 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருமலை : கொரோனா பரவலால் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதியின்றி வருடாந்தித வசந்தோற்சவம் வருகிற 25-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை 3 நாட்கள் ஏகாந்தமாக நடக்கிறது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்தித வசந்தோற்சவம் வருகிற 25-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. 24-ம் தேதி மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது. கொரோனா பரவலால் வசந்தோற்சவம் கோவில் உள்ளே பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது.

26-ம் தேதி தங்க ரதத்துக்கு பதிலாக திருச்சி உற்சவம் நடத்தப்படும்.  3 நாட்களில் மதியம் 2.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை கோவிலில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை கோவில் வளாகம் உள்ளே சாமி ஊர்வலம் நடக்கிறது.

இதனால் 24-ம் தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்படுகிறது. 25-ம் தேதியில் இருந்து 27-ம் தேதி வரை 3 நாட்களுக்கு கல்யாண உற்சவம் மட்டும் ரத்து செய்யப்படுகிறது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் நடப்பதை முன்னிட்டு 18-ம் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.

18-ம் தேதி அதிகாலை தாயாரை துயிலெழுப்பி சுப்ரபாத சேவை நடக்கிறது. காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை கோவில் ஆல்வார் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. அப்போது கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, தூண்கள் மற்றும் பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் பித்தளை, தாமிர பொருட்கள் அனைத்தும் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்படுகிறது. 

இதையடுத்து நாமகொம்பு, ஸ்ரீ சூரணம், கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், பச்சை  கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிகட்டை ஆகிய சுகந்த பொருட்களுடன் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்படுகிறது.

அதன் பின்னர் கோவிலில் பக்தர்கள் காலை 10.30 மணியில் இருந்து பத்மாவதி தாயாரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தால் 18-ம்  தேதி சாதாரண பக்தர்களுக்கான தரிசனம், காலை மற்றும் மாலை பிரேக் தரிசனம், கல்யாண உற்சவம், ஊஞ்சல்சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது, என திருமலை, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து