முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் கங்கை நதியில் மிதந்து வந்த 71 சடலங்கள்: உ.பி.யில் கொரோனாவால் உயிரிழந்தவர்களா?

செவ்வாய்க்கிழமை, 11 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

பாட்னா : பீகாரின் பக்ஸர் மாவட்டத்தில் உள்ள சவுஸா நகரில் பாயும் கங்கை நதியில் நேற்று முன்தினம் 71 சடலங்கள் மிதந்து வந்ததைப் பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களா என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் அந்த உடல்கள் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்களா என்பதைக் கண்டறிய 71 சடலங்களில் இருந்தும் மருத்துவ அதிகாரிகள் மாதிரிகளை எடுத்துக் கொண்ட பின்பே புதைக்கப்பட்டன. ஏறக்குறைய இரவு முழுவதும் உடல்களைப் புதைக்கும் பணி நடந்து நேற்று காலைதான் முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

பக்ஸர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நீரஜ் குமார் சிங்  கூறுகையில், இதுவரை 71 உடல்களைக் கங்கை நதியிலிருந்து மீட்டோம். சில உடல்களை நாங்கள் உரிய மரியாதையுடன் புதைத்து விட்டோம். சில உடல்கள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சில உடல்களுக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட நிலையில் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் கங்கைக் கரையிலேயே புதைக்கப்பட்டன எனத் தெரிவித்தார். 

பக்ஸர் மாவட்ட உயர் அதிகாரி கே.கே.உபாத்யாயே கூறுகையில், 

நதியில் மிதந்து வந்த பல உடல்கள் உரிய மரியாதையுடன் புதைக்கப்பட்டன. பல உடல்கள் எரியூட்டப்பட்டன. உத்தர பிரதேசத்தின் கிழக்கு மாவட்டங்களான வாரணாசி, அலகாபாத் நகரங்களில் இருந்து இந்த உடல்கள் நதியில் வந்திருக்கலாம்.  உடல்கள் அனைத்தும் தண்ணீரில் ஊறிவிட்டன. ஏறக்குறைய 5 முதல் 7 நாட்கள் வரை தண்ணீரில் கிடந்திருக்க வேண்டும். இந்த உடல்கள் எங்கிருந்து வந்தவை என விசாரணை நடத்தப்பட வேண்டும். எனக்குத் தெரிந்து வாரணாசி, அலகாபாத்திலிருந்து வந்திருக்கலாம் எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி இவ்விவகாரம் குறித்து மத்திய அரசை சாடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:-

கொரோனாவால் பலியானவர்களின் உடல்கள் நதிகளில் அடித்து செல்லப்படுகின்றன. கொரோனா சிகிச்சைக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.  மக்களின் வாழ்க்கை பாதுகாப்புக்கான உரிமை பறிக்கப்படுகிறது. பிரதமர் மோடி தனது பிங்க் நிற கண்ணாடியை கழற்றி வைத்து பார்த்தால் தான் சென்ட்ரல் விஸ்டாவைத் தவிர்த்த மற்ற காட்சிகளும் கண்களுக்குத் தெரியும் எனத்தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து