முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த திட்டம்: முன்னதாகவே இந்தியா-இங்கி. டெஸ்ட் தொடரை முடிக்க பி.சி.சி.ஐ கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 21 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : நடப்பு ஐ.பி.எல். தொடரில் எஞ்சிய ஆட்டங்களை நடத்த இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை முன்னதாகவே முடிக்குமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பி.சி.சி.ஐ கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய அணி பயணம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக ஜூன் 2 அன்று இந்திய அணி இங்கிலாந்துக்குச் செல்கிறது.  இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 18 முதல் 22 வரை நடைபெறுகிறது. அதன்பிறகு இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 அன்று தொடங்கி, செப்டம்பர் 14 அன்று முடிவடைகிறது.

31 ஆட்டங்கள்...

கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐ.பி.எல் போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன. ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன. இதனால் இந்த ஆண்டு மீதமுள்ள 31 ஐ.பி.எல் ஆட்டங்களை முடிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது பி.சி.சி.ஐ.

பி.சி.சி.ஐ கோரிக்கை...

இதையடுத்து ஆகஸ்ட் 4 அன்று தொடங்கும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரை ஒரு வாரத்துக்கு முன்பு தொடங்கி, ஒரு வாரத்துக்கு முன்பு முடித்துவிட வாய்ப்புள்ளதா என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பி.சி.சி.ஐ கோரிக்கை வைத்துள்ளது. 

பி.சி.சி.ஐ திட்டம்...

டெஸ்ட் தொடர் ஒரு வாரத்துக்கு முன்பு அதாவது செப்டம்பர் 7 அன்று நிறைவுபெற்றால் அதன்பிறகு செப்டம்பர் மாதத்துக்குள் ஐ.பி.எல் போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களை நடத்திவிட பி.சி.சி.ஐ திட்டமிடுகிறது. எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு நடத்திவிட வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்த போட்டி நடக்கிறது. இதனால் ஐ.பி.எல். ஆட்டங்களை செப்டம்பரில் நடத்திவிட வேண்டும் என்று பி.சி.சி.ஐ திட்டமிடப்பட்டுள்ளது. டி-20 உலகக் கோப்பை அக்டோபர் மத்தியில் ஆரம்பித்து நவம்பர் 14-ல் முடிவடைகிறது.

ஏராளமான சிக்கல்கள்...

பி.சி.சி.ஐயின் கோரிக்கையை ஏற்பதில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு ஏராளமான சிக்கல்கள் உள்ளன. தி ஹண்ட்ரெட் போட்டி ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரில் மாற்றம் ஏற்பட்டால் தி ஹண்ட்ரெட் போட்டிக்கு மைதானங்களை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும். இங்கிலாந்து வீரர்கள் இதில் பங்கேற்பதிலும் பிரச்னைகள் வரலாம். மேலும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான பெரும்பாலான டிக்கெட்டுகளும் விற்றுவிட்டன. 

பேச்சுவார்த்தை 

டெஸ்ட் தொடரில் ஒரு டெஸ்டைக் குறைத்தாலும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்குச் சில சிக்கல்கள் ஏற்படும். இதனால் பி.சி.சி.ஐயின் கோரிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மறுப்பதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளதாகத் தெரிகிறது. எனினும் இரு தரப்பினரும் விரைவில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இங்கிலாந்தில் ...

ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேநேரத்தில் இங்கிலாந்திலும் நடத்தலாமா? என்ற யோசனை இருக்கிறது. ஏனென்றால் வீரர்கள் அனைவரும் அந்த நேரத்தில் இங்கிலாந்தில் இருப்பார்கள் என்பதால்தான் பி.சி.சி.ஐ இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் இந்த கோரிக்கையை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களுக்கு ஐ.சி.சி அனுமதி

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தில் ஜூன் 18-22 வரை நடைபெற உள்ளது. இறுதி போட்டியில் 4ஆயிரம் ரசிகர்களை அனுமதிக்கப்பட உள்ளதாக தி ஹாம்ப்ஷைர் கவுன்டி கிளப்பின் தலைவர் ராட் பிரான்ஸ்குரோவ் கூறியுள்ளார்.

ஐ.சி.சி.யும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு 4,000 பார்வையாளர்களை அனுமதித்துள்ளது. இதில் 50 சதவீத டிக்கெட்டுகள் ஐ.சி.சி வசம் சென்றுவிடும். எனவே மீதமுள்ள 2,000 டிக்கெட்டுகளை நாங்கள் விற்பனை செய்வோம். டிக்கெட் குறித்து ஏற்கெனவே ரசிகர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து