முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலக கோப்பையை இந்தியாவில் நடத்துவது பற்றி ஜூன் 1-ம் தேதி ஐ.சி.சி. முடிவு

சனிக்கிழமை, 22 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய் : கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தால் இந்தியாவிலேயே டி-20 உலக கோப்பையை நடத்தலாம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்து உள்ளது. இதுகுறித்து ஜூன் 1-ம் தேதி ஐ.சி.சி. முடிவு செய்யவுள்ளது.

ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் நடந்த முதல் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. கடந்த ஆண்டு டி-20 உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த போட்டி 2022-ம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இதுவரை ஆறு டி-20 உலக கோப்பை போட்டி நடைபெற்று உள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் 2 முறையும்(2012, 2016), இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இங்கிலாந்து (2010), இலங்கை (2014) ஆகிய நாடுகள் தலா ஒரு முறையும் உலக கோப்பையை கைப்பற்றி உள்ளன.

7-வது டி-20 உலக கோப்பை போட்டி அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது. சென்னை, பெங்களூர், ஐதராபாத், அகமதாபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, டெல்லி, தர்மசாலா ஆகிய இடங்களில் இந்த போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. போட்டிக்கான தேதி, இடம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. 

மொத்தம் 45 ஆட்டங்களை கொண்டது.இதற்கிடையே இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் டி-20 உலக கோப்பை போட்டிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டபடி இந்தியாவில் இந்த போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தநிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இந்தியாவில் நடைபெறும் டி-20 உலக கோப்பை போட்டி குறித்து ஆலோசனை நடத்துகிறது. இந்த கூட்டத்தில் இந்தியாவில் டி-20 உலக கோப்பை போட்டி நடத்த முடியுமா என்பது குறித்து முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படுகிறது.

முன்னதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு 29-ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தில் டி-20 உலக கோப்பை மற்றும் ஐ.பி.எல்.லின் எஞ்சிய ஆட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு தொடர்பாக ஐ.சி.சி. தனது கூட்டத்தில் ஆலோசிக்கும்.

கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தால் இந்தியாவிலேயே டி-20 உலக கோப்பையை நடத்துவது என்று கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது. ஆனால் அதற்காக ஜூன் இறுதி வரை காத்திருக்கிறது. அதே நேரத்தில் ஐ.சி.சி. இதை ஏற்றுக்கொள்ளுமா என்று தெரியவில்லை. ஒருவேளை இந்தியாவில் போட்டி நடைபெறாவிட்டால் மாற்று இடமாக ஐக்கிய அரபு எமிரேட்சை கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து