முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சக வீரரை கொலை செய்த வழக்கு: மல்யுத்த வீரர் சுஷில்குமார் கைது

ஞாயிற்றுக்கிழமை, 23 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சக வீரரை கொலை செய்த புகாரில், தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுஷில் குமார் பலகட்ட தேடுதலுக்கு பிறகு நேற்று டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சகவீரர்கள் மோதல்...

மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் சக வீரரான ராணா தன்கட்டுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன் சாகர் தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தன்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பினர்.

லுக்அவுட் நோட்டீஸ் 

மோசமான காயங்களுடன் கிடந்த சாகர் தன்கட்டை, அவரது  நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். ஆனால், சிகிச்சைப் பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார். இதையடுத்து, சாகர் தன்கெட் மரணத்தை கொலை வழக்காக போலீஸார் மாற்றி மல்யுத்த வீரர் சுஷில் குமாரைத் தேடி வந்தனர். சுஷில் குமார் நாட்டை விட்டு தப்பி செல்ல முடியாத வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்தனர்.

ரூ.1 லட்சம் சன்மானம் 

கடந்த இரு வாரங்களாக தனிப்படை அமைத்து சுஷில் குமாரை பஞ்சாப், டெல்லி என இரண்டு மாநிலங்களிலும் அவரை தீவிரமாக தேடினர். ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டையும் பிறப்பித்தனர். டெல்லி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த சுஷில் குமாரின் மனு மே 18ம் தேதி நிராகரிக்கப்பட்டது. மேலும் சுஷில் குமார் இருப்பிடம் குறித்து துப்பு அளித்தால் ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என டெல்லி போலீஸார் அறிவித்தனர்.

அதிரடியாக கைது...

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த சுஷில் குமாரை போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வந்த நிலையில், டெல்லி காவல்துறையினரிடம் தற்போது சிக்கியுள்ளார். நேற்று டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு, சுஷில் குமாரை அதிரடியாக கைது செய்தது. இத்தகவலை போலீஸ் அதிகாரி நிரஜ் தாக்வர் உறுதி செய்துள்ளார். 

ஒரே இந்தியர் சுஷில்

சுதந்திரத்திற்கு பிறகு 2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக இருந்து வருகிறார் 37 வயதாகும் சுஷில் குமார். 2008-ல் பீஜிங்கில் வெண்கலமும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளார்.

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது 2009-ல் சுஷிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2010 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் (மாஸ்கோ), காமன்வெல்த் போட்டிகளில் 3 தங்கம், ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம், காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் 5 தங்கம் என சர்வதேச அளவில் இந்தியாவை புகழின் உச்சத்துக்கு கொண்டு சென்றவர் சுஷில் குமார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து