முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 மீட்டர் உயரத்திற்கு எழுந்த கடல் அலைகள்: ஒடிசாவில் கரை கடந்தது அதி தீவிர யாஸ் புயல்: வேரோடு சாய்ந்த மரங்கள் - காற்றில் பறந்த கூரைகள்

புதன்கிழமை, 26 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புவனேஸ்வரம் : வங்க கடலில் கடந்த 22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவானது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. கடந்த திங்கட்கிழமை இது புயலாக மாறியது. இதற்கு யாஸ் என பெயரிடப்பட்டது.  நேற்று முன்தினம் யாஸ் புயல் அதிதீவிர புயலாக உருவெடுத்தது. வங்க கடலில் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்த யாஸ் புயல் நேற்று ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தபடி யாஸ் புயல் ஒடிசாவின் வடக்கு கடலோரம்  தம்ரா துறைமுகத்திற்கு வடக்கே மற்றும் பாலசோருக்கு தெற்கே பாரதீப் மற்றும் சாகர் தீவுக்கு இடையே நேற்று மதியம் கரையை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு இருந்தது.  புயல் கரையை கடக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். 

அதன்படி மேற்கு வங்கத்தில் இருந்து மட்டும் சுமார் 11 லட்சம் மக்களும், ஒடிசாவில் இருந்து 10 லட்சம் மக்களும் நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் இந்த பகுதிகளில் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் கண்காணிப்பு பணிக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.  45 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இப்பகுதிகளில் முகாமிட்டு இருந்தனர்.  இதுபோல ராணுவத்தினரும் தயார் நிலையில் இருந்தனர். 

இதற்கிடையே யாஸ் புயல் காரணமாக வங்க கடலில் 165 முதல் 185 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்று கூறப்பட்டது. அதற்கேற்ப நேற்று காலை முதலே ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடல் பகுதியில் பயங்கர சூறைக்காற்று வீசியது.  இதன் மூலம் புயலின் முதல் பகுதி கரையை கடக்க தொடங்கியது. இதனால் கடல் அலைகளும் 2 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு எழுந்தன. ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் மேதினிபூர், பங்குரா, ஜார்கிராம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களில் கனமழை கொட்டியது. கொல்கத்தா, நாடியா பகுதிகளிலும் பயங்கர சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. 

நேற்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி யாஸ் புயலானது வங்க கடலில் வடமேற்கில் மையம் கொண்டிருந்தது. அதன் பிறகு மெல்ல நகர்ந்து தம்ரா நகருக்கு கிழக்கே 60 கிலோ மீட்டர் தொலைவிலும், ஒடிசாவின் பாரதீப்புக்கு கிழக்கு மற்றும் வடகிழக்கில் 90 கிலோ மீட்டர் தொலைவிலும், டிகா நகரின் தெற்கே 100 கிலோ  மீட்டர் தொலைவிலும் பாலசோரின் தெற்கு மற்றும் தென்கிழக்கில் 105 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. 11 மணிக்கு மேல் ஒடிசா மாநிலம் பாலசோருக்கு கிழக்கே 50 கி.மீட்டர் தூரத்தில் கடலில் மையம் கொண்டு இருந்தது.

அப்போது புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது. பயங்கர சூறைக்காற்று வீசியது. மணிக்கு 100 கி.மீட்டருக்கு மேல் இதன் வேகம் இருந்தது. இதனால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தது.  இதேபோல மேற்கு வங்காளத்திலும் பலத்த சூறைக்காற்று வீசியது. புயல் முழுமையாக கரையை கடக்க 6 மணி நேரம் ஆகும் என்று கணித்தனர். இதனால் நேற்று பிற்பகலில் ஒடிசாவின் பாலசோர் தெற்கில் புயல் முழுமையாக கரையை கடந்தது.  

ஒடிசாவில் பாலசோர், பத்ராக், ஜகத்சிங்க்பூர் மற்றும் கேந்திரபாரா மாவட்டங்களும், மேற்கு வங்காளத்தில் தெற்கு மற்றும் வடக்கு 24 பராகனாக்கள், திகா, கிழக்கு மிடனாபூர் மற்றும் நந்திகிராம் ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. கொல்கத்தாவின் 13 தாழ்வான  பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திகா நகரில் ஒருவர் இறந்து விட்டார் - அவர் மீன் பிடிக்க முயன்றபோது அவர் கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது என கூறி உள்ளார். மேலும் மம்தா பானர்ஜி கூறும் போது 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.  மூன்று லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன.யாஸ் புயலால் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை அரசு ஒதுக்கியுள்ளது.

புயல் கரை கடந்த பின்னர் ராணுவம் மற்றும் மீட்பு படையினர் முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரணப் பணியை மேற்கொண்டுள்ளனர். சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களை முதலில் வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் பணியும் நடைபெறுகிறது.  

ஒடிசாவில் புயல் ஆபத்து உள்ள பகுதிகளில் வசித்த 5.8 லட்சம் மக்களும், மேற்கு வங்காளத்தில் 15 லட்சம் மக்களும் முன்கூட்டியே மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவில் பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. ஒடிசாவில் மரம் விழுந்து ஒருவர் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து முழுவீச்சில் மீட்பு பணி நடைபெறுகிறது.

யாஸ் புயல் கரையை கடந்த பின்னரும் ஒடிசா மற்றும் மேற்கு வங்க பகுதியில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. மேற்கு வங்கம், ஒடிசாவை போன்று அதன் அண்டை மாநிலங்களான ஜார்கண்ட்டிலும் பலத்த மழை பெய்யும் என்று கூறப்பட்டு இருந்தது. 

வங்க கடலில் உருவான யாஸ் புயல் காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவிலும் மழை பெய்தது. கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.  இதுபோல கேரளாவையொட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் நேற்று முன்தினம் பகல் முதல் மழை பெய்தபடி இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து