முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாரதா வழக்கு: கைதான திரிணாமுல் காங். தலைவர்கள் 4 பேருக்கு இடைக்கால ஜாமீன்

வெள்ளிக்கிழமை, 28 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : நாரதா டேப் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரசின் 4 தலைவர்களுக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டில் அப்போதைய திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் சிலர் லஞ்சம் பெற்றதை நரதா டி.வி. சேனல் அம்பலப்படுத்தியது. இதில்  அப்போதைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பிர்காத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, மதன் மித்ரா, சோவன் சட்டர்ஜி ஆகியோர் நரதா சேனல் வலையில் சிக்கிக் கொண்டனர்.

அவர்கள் லஞ்சம் பெற்ற வீடியோவை கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு நாரதா சேனல் வெளியிட்டது. இந்த விவகாரம் மேற்கு வங்கம் மட்டுமின்றி நாடு முழுவதும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  கடந்த 2017-ம் ஆண்டு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவின்படி இந்த விவகாரம் சி.பி.ஐ.யால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் சிக்கிய பிர்காத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, மதன் மித்ரா ஆகிய 3 பேரும் சமீபத்திய சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்கள் ஆனார்கள். இதில் பிர்காத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாகி உள்ளனர். மதன் மித்ரா எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அதேநேரம் கொல்கத்தா முன்னாள் மேயரும், முன்னாள் அமைச்சருமான சோவன் சட்டர்ஜியோ திரிணாமுல் காங்கிரசில் கட்சியில் இருந்து சற்று விலகி இருந்து வருகிறார்.

இந்நிலையில், சி.பி.ஐ. அமைப்பு குற்றப்பத்திரிகையை இறுதி செய்து கவர்னர் அனுமதியுடன் அவர்கள் 4 பேரையும் கைது செய்தது.  அவர்களுக்கு சி.பி.ஐ. கோர்ட்டு ஜாமீன் அளித்தது.  ஆனால், சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டின் பேரில், ஜாமீன் உத்தரவுக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. அதனால் 4 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.  4 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றக் கோரி சி.பி.ஐ. ஒரு மனு தாக்கல் செய்திருந்தது. கொல்கத்தா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ் பிண்டால் தலைமையிலான அமர்வு கடந்த வாரம் இதனை விசாரிக்க இருந்தது. ஆனால், விசாரணையை ஒருநாள் தள்ளி வைத்தது. இருப்பினும், தவிர்க்க இயலாத காரணங்களால், அந்த அமர்வு கூடவில்லை. இதனால் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டில் 4 பேரின் ஜாமீன் மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.  இதில் திரிணாமுல் காங்கிரசின் 4 தலைவர்களுக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.  இதற்காக 4 பேரும் தலா ரூ. 2 லட்சம் தனிநபர் பிணை தொகையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.  அவர்கள் விசாரணைக்கு காணொலி காட்சி வழியே கலந்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.  நாரதா டேப் லஞ்ச வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் சூழலில் அவர்கள் 4 பேரும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து