முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சகவீரரை கொலை செய்த வழக்கு: சுஷில் குமாரின் நண்பர் பிரின்ஸ் அரசு சாட்சியாக மாற முடிவு

சனிக்கிழமை, 29 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் நெருங்கிய நண்பர் பிரின்ஸ் அரசு சாட்சியாக மாறுவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2 முறை பதக்கம் 

ஒலிம்பிக் போட்டிகளில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் (வயது 38).  மல்யுத்த போட்டியின் முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் தங்கர் (வயது 23) என்பவருடன் டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் வைத்து கடந்த 4-ம் தேதி மோதலில் ஈடுபட்டு உள்ளார்.

போலீசில் புகார்

இதில், சாகர் மற்றும் அவருடைய நண்பர்களை, சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.  பின்னர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டனர். இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்து கிடந்த சாகரை மற்றொரு நண்பர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.  ஆனால், சிகிச்சை பலனின்றி சாகர் உயிரிழந்தார். இது தொடர்பாக சாகர் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

பல பிரிவுகளில் வழக்கு

மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 12 பேரை போலீசார் தேடி வந்தனர்.  இந்த நிலையில் அவர் தலைமறைவானார்.  சாகர் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர்.  அவரின் நண்பர்கள் மீதும் போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

நான்கு பேர் கைது...

தீவிர தேடுதலுக்கு பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி போலீசார் அவரை கைது செய்தனர்.  அவரை 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த வழக்கில் சுஷில்குமாரின் கூட்டாளிகளான மேலும் 4 பேரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். அவர்களில் பூபேந்தர், மோகித், குலாப் ஆகிய 3 பேர் அரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தையும், மன்ஜீத் என்பவர் ரோத்தக் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.

விசாரணையில் ஒப்புதல்

இந்நிலையில், சுஷில் குமாரின் மற்றொரு கூட்டாளியை டெல்லி போலீசார் கைது செய்தனர்.  அவர் பெயர் ரோகித் கக்கோர்.  சம்பவம் நடந்தபொழுது, சத்ராசல் அரங்கில் கக்கோர் இருந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.  இதுவரை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இதனை தொடர்ந்து 9வது குற்றவாளியான தேடப்பட்ட பிந்தர் (விஜேந்தர் என்ற) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.  மல்யுத்த வீரரான அவர், சாகர் ராணாவை, சுஷில் குமாரின் அறிவுறுத்தலின்பேரில் நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியுள்ளார்.  இதனை அவர் விசாரணையில் ஒப்பு கொண்டுள்ளார்.

அரசு சாட்சியாக... 

கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் நெருங்கிய நண்பரான பிரின்ஸ் அரசு சாட்சியாக மாறுவதற்கு முடிவு செய்துள்ளார்.  சத்ராசல் அரங்கில் மோதல் நடந்தபோது, அதனை படம்பிடிக்கும்படி, பிரின்சிடம் சுஷில் குமார் கூறியுள்ளார்.  அந்த வீடியோவை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த வழக்கில் 12 முக்கிய குற்றவாளிகளில் 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  தப்பியோடிய பிரவீன், பிரதீப் மற்றும் வினோத் பிரதான் ஆகிய மற்ற 3 பேரையும் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து