முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர் ராஜகோபாலனை நாளை மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 1 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஆசிரியர் ராஜகோபாலனை ஜூன் 3-ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்திரி பள்ளியில் பணியாற்றி வந்த வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், அங்கு படித்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வடபழனி போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.  அதைத் தொடர்ந்து ஆசிரியர் ராஜகோபாலன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தன் மீது வேண்டுமென்றே பொய்ப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இதற்கிடையே ஆசிரியர் ராஜகோபாலன் எந்த ஆண்டு முதல் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார், அவரால் எத்தனை மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிய அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் அதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.  

இந்த மனுக்கள் நீதிபதி முகமது பரூக் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது நீதிபதி, ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3-ம் தேதிக்கு  தள்ளிவைத்தார்.

இந்நிலையில் ஆசிரியர் ராஜகோபாலனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய இன்ஸ்பெக்டரின் மனு மீதான விசாரணை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. மனுவை விசாரித்த  நீதிபதி ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். 

ஆசிரியர் ராஜகோபாலனை ஜூன் 3-ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.  ஆசிரியர் ராஜகோபாலனை 5 நாள் காவலில் விசாரிக்க  போலீசார் அனுமதி கோரிய நிலையில் 3 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து