முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவி: வெளிமாநில பேராசிரியர்கள் ஆர்வம்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிக்கு வெளிமாநில பேராசிரியர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பிக்க துவங்கிஉள்ளனர்.

தமிழக பல்கலை பொறுப்புகளை வெளிமாநிலத்தவரும் பெறும் வகையில் 2017ல் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, பல்கலை துணைவேந்தர்கள் தேடல் குழுவில் உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உள்ளிட்டோரும் இடம் பெறலாம். இதையடுத்து நாட்டின் பல்வேறு பல்கலைகளை சேர்ந்த துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆகியோர் தமிழக பல்கலைகளின் துணைவேந்தர்கள் தேடல் குழுக்களில் இடம் பெற்றனர். அத்துடன் வெளி மாநிலத்தினர், தமிழக பல்கலைகளின் துணைவேந்தர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

அண்ணா பல்கலைக்கு கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா; இசை பல்கலைக்கு கேரளாவை சேர்ந்த பிரமிளா குருமூர்த்தி; தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கு ஆந்திராவை சேர்ந்த சூரியநாராயண சாஸ்திரி ஆகியோர் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டனர். இதற்கு, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவி தற்போது காலியாக உள்ளது. இந்த பதவியில் புதிய துணைவேந்தரை நியமிக்க, தேடல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், முந்தைய அரசாணையின்படி, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் துணைவேந்தர் ஜெகதீஷ் குமார், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலாராணி சுங்கத், அவினாசிலிங்கம் பல்கலை வேந்தர் தியாகராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். துணைவேந்தர் பதவிக்கு தகுதியான, அனுபவம் உள்ளவர்கள், வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாறினாலும், பழைய அரசாணைப்படியே துணைவேந்தர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதையடுத்து, வெளிமாநிலத்தை சேர்ந்த பேராசிரியர்கள் பலர், அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிக்கு ஆர்வத்துடன் விண்ணப்பிக்க துவங்கிஉள்ளனர். வெளிமாநிலத்தவரை தேர்வு செய்வதற்கு எந்த தடையும் இல்லை என்பதால் விண்ணப்பங்கள் பெறப்படுவதாக, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து