Idhayam Matrimony

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 12-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

செவ்வாய்க்கிழமை, 8 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பாரீஸ் : பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் கால்இறுதிக்கு முன்னேறினார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 76-ம் நிலை வீரரான 19 வயது லோரென்ஜோ முசெட்டியை (இத்தாலி) சந்தித்தார். 3 மணி 27 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்களை 6-7 (7-9), 6-7 (2-7) என்ற கணக்கில் இழந்த ஜோகோவிச் சரிவில் இருந்து மீண்டு வந்து அடுத்த 2 செட்களையும் 6-1, 6-0 என்ற கணக்கில் தனதாக்கினார். கடைசி செட்டில் ஜோகோவிச் 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது முசெட்டி காயத்தால் விலகினார். இதனால் ஜோகோவிச் வெற்றி பெற்று தொடர்ச்சியாக 12-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா) 7-6 (11-9), 6-4, 7-5 என்ற நேர்செட்டில் லெனர்ட் ஸ்டிரப்பை (ஜெர்மனி) தோற்கடித்து 3-வது முறையாக கால் இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். முந்தைய நாளில் நடந்த ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-4, 6-1, 6-1 என்ற நேர்செட்டில் 49-ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷிகோரியை விரட்டியடித்து 3-வது முறையாக கால்இறுதிக்குள் கால்பதித்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் மரியா சக்காரி (கிரீஸ்) 6-1, 6-3 நேர்செட்டில் 5-ம் நிலை வீராங்கனையான சோபியா கெனினுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்து முதல்முறையாக கால் இறுதிக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் 17 வயது கோகோ காப் (அமெரிக்கா), பார்போரா கிராஜ்சிகோவா (செக்குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்று முதல்முறையாக கால் இறுதிக்கு தகுதி பெற்றனர். 

முந்தைய நாளில் நடந்த ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான 39 வயது அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 4-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்டார். அவரை 22-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரைபகினா 6-3, 7-5 என்ற நேர்செட்டில் வீழ்த்தி முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் கால்இறுதிக்குள் நுழைந்தார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் கால்இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, குரோஷியாவின் பிராங்கோ ஸ்குகோர் ஜோடி 5-7, 3-6 என்ற நேர்செட்டில் ஸ்பெயினின் பாப்லோ அன்டுஜர்-பெட்ரோ மார்டினஸ் இணையிடம் தோல்வி கண்டு வெளியேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து