முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முகுல்ராய்க்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்: மத்திய அரசு அறிவிப்பு

வியாழக்கிழமை, 17 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : திரிணாமுல் காங்கிரசில் மீண்டும் இணைந்த முகுல்ராய்க்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது. 

பா.ஜ.க. தேசிய துணைப்பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்த முகுல் ராய் கடந்த 11-ம் தேதி திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.  67 வயதான முகுல் ராய் 1998-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பின்னர் காங்கிரசில் இருந்து விலகிய அவர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.  1998 முதல் திரிணாமுல் காங்கிரசில் இருந்து வந்த முகுல் ராய் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும், இவர் சில பா.ஜ.க. தலைவர்களையும் சந்தித்தார். இதனால், 2015-ம் ஆண்டு முகுல் ராயை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்குவதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். 

இதனை தொடர்ந்து 2017-ம் ஆண்டு முகுல் ராய் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அவருக்கு பா.ஜ.க. தேசிய துணைப்பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

இதற்கிடையில், முகுல் ராய் கடந்த 11-ம் தேதி பா.ஜ.க.வில் இருந்து விலகி மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். திரிணாமுல் காங்கிரசில் இணைந்த முகுல் ராய்க்கு அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளது. திரிணாமுல் காங்கிரசில் இணைந்ததை தொடர்ந்து தனக்கு வழங்கப்பட்டு வரும் மத்திய பாதுகாப்பு படையினரை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த 12-ம் தேதி முகுல் ராய் கடிதம் எழுதினார்.

இந்நிலையில், முகுல் ராய் அனுப்பிய கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு வழங்கி வந்த மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பை திரும்பப் பெற நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது.   அதன் அடிப்படையில் முகுல் ராய்க்கு வழங்கப்பட்டு வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு நேற்று முதல் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக திரிணாமுல் காங்கிரசில் மீண்டும் இணைந்துள்ள முகுல் ராய்க்கு மேற்குவங்காள அரசு சார்பில் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து